ஆப்கானிஸ்தான் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
23 ஆனி 2024 ஞாயிறு 07:53 | பார்வைகள் : 927
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக்கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
செயிண்ட் வின்சென்ட் மைதானத்தில் நடந்த போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் (Rahmanullah Gurbaz) மற்றும் இப்ராஹிம் ஜட்ரான் (Ibrahim Zadran) நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அவுஸ்திரேலிய பந்துவீச்சை கவனமாக கையாண்ட இருவரும் அரைசதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 118ஆக உயர்ந்தபோது குர்பாஸ் ஆட்டமிழந்தார்.
அவர் 49 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் வந்த ஓமர்சாய் 2 ஓட்டங்களில் ஜம்பா பந்துவீச்சில் போல்டு ஆனார்.
அதே ஓவரில் 51 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் இப்ராஹிம் ஜட்ரான் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து பேட் கம்மின்ஸின் அபார பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆப்கானிஸ்தான், 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 148 ஓட்டங்கள் எடுத்தது. கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளும், ஸ்டோய்னிஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. நவீன் உல் ஹக் ஓவரில் டிராவிஸ் ஹெட் ரன் எடுக்காமல் போல்டு ஆனார்.
பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் மார்ஷ் 12 ஓட்டங்களில் அவுட் ஆக, வார்னர் 3 ஓட்டங்களில் நபி பந்துவீச்சில் வெளியேறினார். இதனால் அவுஸ்திரேலிய அணி 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என தடுமாறியது.
அப்போது வந்த மேக்ஸ்வெல் (Maxwell) அதிரடியாக ஆடி அணியை மீட்க போராடினார். ஆனால், ஆப்கான் வீரர் குல்பதின் நைப் அவுஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
அவரது மிரட்டல் பந்துவீச்சில் ஸ்டோய்னிஸ் (11), டிம் டேவிட் (2) ஆட்டமிழந்தனர். இதற்கிடையில் சிக்ஸர், பவுண்டரிகள் என மிரட்டிய மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார்.
அவர் 41 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது குல்பதின் ஓவரில் நூர் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. மேத்யூ வேட்-ஐ 5 ஓட்டங்களில் ரஷீத் கான் வெளியேற்ற, நவீன் ஓவரில் ஆஸ்டோன் அகர் (2) அவுட் ஆனார்.
கடைசி ஓவரில் அவுஸ்திரேலிய வெற்றிக்கு 24 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஓமர்சாய் வீசிய அந்த ஓவரின் 2வது பந்தில் ஆடம் ஜம்பா (9) நபியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 127 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. குல்பதின் நைப் 20 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.