லெபனான் யுத்தம் குறித்து எச்சரிக்கும் பெஞ்சமின் நெட்டன்யாகு
24 ஆனி 2024 திங்கள் 09:41 | பார்வைகள் : 3239
ஹமாஸ் அமைப்புடனான போரின் தற்போதைய கட்டத்தை முடிவிற்கு வரும் நிலையில் இஸ்ரேல் உள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அதேவேளை லெபனான் யுத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசாவில் ஹமாசுடனான போரின் தற்போதைய கட்டம் முடிவிற்கு வருகின்றது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பை எதிர்கொள்வதற்காக இஸ்ரேல் தனது வடபகுதி எல்லைக்கு மேலும் படையினரை அனுப்பவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ரபாவில் தனது நடவடிக்கையை பூர்த்தி செய்யும் நிலையில் இஸ்ரேலிய இராணுவம் உள்ளதாக தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்துள்ள பெஞ்சமின் நெட்டன்யாகு எனினும் அதன் அர்த்தம் காசா யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டது என்பதல்ல என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எதிர்காலத்தில் காசாவில் தற்போது நிலைகொண்டுள்ளதை விட குறைந்தளவு படையினரே தேவைப்படுவார்கள் என தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் அங்கிருந்து படையினரை விலக்கி அவர்களை ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளிற்கு பயன்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வடபகுதி எல்லைக்கு எங்கள் படையினரை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் மிக முக்கியமானது தற்பாதுகாப்பே என அவர் தெரிவித்துள்ளார்.
ஹெஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலும் யுத்தத்தை நோக்கி நகர்கின்ற நிலையில் இந்த கருத்துக்கள் பதற்றத்தை மேலும் அதிகரிப்பவையாக காணப்படுகின்றன.
ஒக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் காசாமீது தாக்குதலை ஆரம்பித்தவுடன் ஹெஸ்புல்லா அமைப்பு உடனடியாக இஸ்ரேலிற்கு எதிராக ரொக்கட் தாக்குதல்களை ஆரம்பித்திருந்தது.
அதன் பின்னர் இஸ்ரேலிய படையினரும் ஹெஸ்புல்லா அமைப்பினரும் நாளாந்தம் மோதல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
எனினும் கடந்த சில வாராங்களாக இந்த மோதல் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்துமுழுமையான யுத்தம் குறித்த அச்சநிலையேற்பட்டுள்ளது.