குப்பைகளுடன் பறக்கவிடப்பட்ட வடகொரிய பலூன்கள் தொடர்பில் தென் கொரியா விளக்கம்
25 ஆனி 2024 செவ்வாய் 08:06 | பார்வைகள் : 1872
வடகொரியாவில் இருந்து பறக்கவிடப்பட்ட பலூன்களில் என்ன இருந்தது என்பது தொடர்பில் தென் கொரியா தரப்பு தற்போது உத்தியோகப்பூர்வ விளக்கமளித்துள்ளது.
திங்கட்கிழமை அன்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அச்சிடப்பட்ட ஹலோ கிட்டி உருவ பொம்மைகள், மோசமாக கிழிந்த சிறார்களின் ஆடைகள் மற்றும் மனித மலம், ஒட்டுண்ணிகளின் தடயங்களைக் கொண்ட மண் ஆகியவை அந்த பலூன்களுடன் பறக்கவிடப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா மே மாத இறுதியில் இருந்து குப்பைகளுடன் பலூன்களை பறக்கவிட்டது.
அதில் நூற்றுக்கணக்கான பலூன்கள் தென் கொரியாவில் தரையிறங்கியது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,
அந்த பலூன்களை ஆய்வு செய்யும் பொருட்டு, தென் கொரியா இராணுவ வெடிமருந்துப் பிரிவுகளையும் இரசாயன மற்றும் உயிரியல் போர்க் குழுக்களையும் களமிறக்கியது.
அந்த பலூன்களில், தென் கொரியா நன்கொடையாக அளித்த ஆடைகள் கிழிக்கப்பட்டு, அத்துடன் தெருக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளும் வடகொரியாவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவில் இருந்து வெளியேறி தென் கொரியாவில் தஞ்சமடைந்துள்ள மக்களின் பரப்புரைகளுக்கு பதிலடி தரும் வகையிலேயே பலூன்களை பறக்க விட்டதாக வடகொரியா விளக்கமளித்துள்ளது.
ஆனால் பொதுவாக தென் கொரியாவில் இருந்து உணவு பண்டங்கள், மருந்து, பணம் மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு எதிராக கருத்துகள் அடங்கிய துண்டுச்சீட்டுகள் என பலூன்களை பறக்க விடுவது வாடிக்கையாக நடந்து வருவதுண்டு.
தற்போது வடகொரியாவில் இருந்து மனித கழிவுகள் உட்பட குப்பைகளை அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த 2017 வரையில் ரசாயன உரங்களுக்காக தென் கொரியாவை நம்பியிருந்த நிலையில்,
ஆயுத உற்பத்தியில் வடகொரியா தீவிரம் காட்டியதை அடுத்து அந்த உதவி நிறுத்தப்பட்டதை அடுத்து கடுமையான உனவு பற்றாக்குறையை வடகொரியா எதிர்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.