Paristamil Navigation Paristamil advert login

சபாநாயகர் தேர்தல்: காங்., மீது திரிணமுல் அதிருப்தி?

சபாநாயகர் தேர்தல்: காங்., மீது திரிணமுல் அதிருப்தி?

25 ஆனி 2024 செவ்வாய் 16:31 | பார்வைகள் : 275


சபாநாயகர் தேர்தலில், காங்., சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தில் திரிணமுல் காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவை காங்., தன்னிச்சையாக எடுத்துள்ளதாக அக்கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.


வேட்புமனு

லோக்சபா சபாநாயகர் பதவிக்கு போட்டியிட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே ஒரு மித்த கருத்து ஏற்படவில்லை. இதனையடுத்து தேஜ கூட்டணி சார்பில் ஓம் பிர்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் சார்பில் சுரேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதிருப்தி

தேர்தலுக்கு முன்பாகவே, மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் மோதல் ஏற்பட்டது. இரு கட்சிகளும் அங்கு தனித்தனியே போட்டியிட்டன. தற்போது தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்த காங்கிரஸ் மீது திரிணமுல் காங்., அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


மேலிடம் முடிவு

இது தொடர்பாக திரிணமுல் காங்., மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் ஆங்கில டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வேட்பாளர் அறிவிப்பு குறித்து திரிணமுல் காங்., கிடம் ஆலோசனை நடத்தப்படவில்லை. டிவி மூலம் பார்த்து தான் நான் தெரிந்து கொண்டேன். டெப்ரிக் ஓ பிரையனும் என்னிடம் கேட்டார். இது குறித்து எந்த ஆலோசனையும் செய்யப்படவில்லை என தெரிவித்தேன். இது குறித்து காங்., விளக்கம் அளிக்க வேண்டும். காங்., வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். எங்கள் தலைவர்கள் முடிவு செய்வர். கட்சி மேலிடம் அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


கடைசி நிமிடம்


இது தொடர்பாக காங்., வட்டாரங்கள் கூறியதாவது: வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி 10 நிமிடங்கள் மட்டுமே இருந்தது. கடைசி நேரத்தில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்பட்டதால், யாரிடமும் ஆலோசனை நடத்தப்படவில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


ராகுல் விளக்கம்

இதனிடையே, தேர்தலில் ஆதரவு கேட்டு திரிணமுல் காங்., தலைவர்களிடம் சுரேஷ் பேசி உள்ளதாகவும், முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜியிடம், வேட்பாளர் அவசரமாக தேர்வு செய்யப்பட்டது குறித்து ராகுல் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்