இந்தோனேசியாவில் 3வது மாடி ஜன்னலில் இருந்து தவறி விழுந்த பெண்

26 ஆனி 2024 புதன் 09:25 | பார்வைகள் : 4275
இந்தோனேசியாவில் உடற்பயிற்சி கூடத்தில் டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த 22 வயது பெண் மூன்றாவது தள ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான், பொன்டியானக்கில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் டிரெட்மில்லில் (treadmill) ஓடி பயிற்சி செய்து கொண்டு இருந்த 22 வயது பெண் மூன்றாவது தள ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் பெயர் விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், ஜூன் 18 ஆம் திகதி இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, சுமார் 30 நிமிடங்கள் ஓடி பயிற்சி செய்த பெண் திடீரென பின்னால் தள்ளாடி கீழே விழுந்ததாக சொல்லப்படுகிறது.
பல செய்தி நிறுவனங்களின் தகவல்படி, டிரெட்மில்லுக்கும் திறந்த ஜன்னலுக்கு இடையே 2 அடி தூரம் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.
உடற்பயிற்சி கூடத்தின் சிசிடிவி காட்சிகள் பெண் ஜன்னல் சட்டத்தை பிடிக்க முயற்சித்து பின்னர் கீழே விழுவதை காட்டுகின்றன.
இச்சம்பவத்தை தொடர்ந்து அவசர சேவைகள் விரைவாக அழைக்கப்பட்டு, பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், தலையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.