இலங்கை கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் பதவி விலகல்!
27 ஆனி 2024 வியாழன் 08:18 | பார்வைகள் : 733
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும் ஆலோசகர் பயிற்சியாளரும் ராஜினாமா செய்துள்ளனர்.
உலகக் கோப்பையில் இருந்து இலங்கை வெளியேறியதைத் தொடர்ந்து, இலங்கை தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் (Chris Silverwood) மற்றும் ஆலோசகர் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தன (Mahela Jayawardena) ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான சில்வர்வுட், இலங்கை ஆண்கள் தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இரண்டு வருட ஒப்பந்தத்தில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியால் (SLC) ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அவர் தனது இரண்டு வருட பதவிக் காலத்தை முடித்த பின்னர், இலங்கை தேசிய கிரிக்கெட் அணி தனது ஒப்பந்தத்தை T20 உலகக் கோப்பை முடியும் வரை நீட்டித்தது.
இருப்பினும் இலங்கை அணி ஆரம்பத்திலேயே வெளியேறியதால், குறித்த தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அவருடைய தனிப்பட்ட முடிவு எனவும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 2022 ஜனவரியில் இலங்கை ஆண்கள் அணி, 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் இலங்கை A அணிகளின் ஆலோசக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜெயவர்தனவும் ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணி தனது சில பொறுப்புகளை சனத் ஜெயசூரியாவுக்கு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.