பெரு நாட்டில் பாரிய நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
28 ஆனி 2024 வெள்ளி 08:45 | பார்வைகள் : 1557
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று, வெள்ளிக்கிழமை, தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில், ரிக்டர் அளவுகோலில் 7.2 அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சி அமைப்பான United States Geological Survey (USGS) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
அதேபோல, கடற்கரையின் சில பகுதிகளில் 1 முதல் 3 மீற்றர் உயரம் வரையுள்ள அலைகள் எழக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
பின்னர் அது எச்சரிக்கையை திரும்பப் பெற்றுவிட்டது. இப்போது, நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
பெரு நாட்டில் சுமார் 33 மில்லியன் மக்கள் வாழும் நிலையில், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் அந்நாட்டை தாக்குவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.