Paristamil Navigation Paristamil advert login

நீட் தேர்வு குறித்த சட்டசபை தீர்மானத்தால் என்ன பலன்? இபிஎஸ் கேள்வி

நீட் தேர்வு குறித்த சட்டசபை தீர்மானத்தால் என்ன பலன்? இபிஎஸ் கேள்வி

29 ஆனி 2024 சனி 07:36 | பார்வைகள் : 288


நீட் தேர்வு குறித்து 3வது முறையாக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்?''என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கருத்துகள், உத்தரவுகள், நீட் தேர்வு குறித்த முறைகேடுகள் தொடர் அம்பலம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பது, தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கம், முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு என தொடர்ச்சியான நிகழ்வுகள் சொல்கின்ற செய்தி ஒன்று தான்- நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று!

நாடகம்
38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் பார்லி.,யில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3வது முறையாக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்? இத்தீர்மானம் இந்த விடியா திமுக அரசின் மற்றுமொரு அரசியல் நாடகம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை மடைமாற்ற நினைக்கும் இதுபோன்ற பயனற்ற அரசியல் வித்தைகளை மக்கள் இனியும் நம்புவதாக இல்லை.

அதிமுக குரல்
நீட் தேர்வை பார்லிமென்ட் மூலம் மறுபரிசீலனை செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை வருகின்ற பார்லி கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய பாஜ கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன். ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வு ஒழியும் வரை அதிமுக.,வின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்