கள்ளச்சாராய விற்பனை நடந்தால் போலீஸ் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர்
29 ஆனி 2024 சனி 07:38 | பார்வைகள் : 1201
சாராய விற்பனை நடந்தால் மாவட்ட போலீஸ் அதிகாரி பொறுப்பு ஏற்க வேண்டும் என கண்டிப்புடன் சொல்லி இருக்கிறேன். '' என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
நடவடிக்கை
காவல்துறை மானியக் கோரிக்கை மீது பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தேர்தல் தோல்வியை மறைக்க கள்ளக்குறிச்சி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து உள்ளனர்.
கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக 20 பேரை கைது செய்துள்ளோம். இந்த விவகாரம் குறித்து முழுமையான தகவலை சட்டசபையில் தெரிவித்து உள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மறைக்கவில்லை
கள்ளச்சாராயம் குறித்து ஒரு நபர் கமிஷன் விசாரித்து வருகிறது. அமைச்சர்கள், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன். கள்ளச்சாராய விவகாரத்தில் 24 மணி நேரத்தில் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
இதற்கு பின்பாகவும் நடவடிக்கை சரியில்லை என்று சொல்வது அவர்களது திசைதிருப்பும் நாடகம். கள்ளச்சாராய வழக்கு விசாரணையில் எதை மறைத்தோம் சிபிஐ விசாரணை கோருவதற்கு. தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை. கள்ளச்சாராய விற்பனை நடந்தால் மாவட்ட போலீஸ் அதிகாரிகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என கண்டிப்புடன் சொல்லி இருக்கிறேன்.
உறுதி
சாத்தான்குளம் மரண சம்பவத்தை அதிமுக அரசு மறைக்க நினைத்ததால் சிபிஐ விசாரணை கேட்டோம். கள்ளச்சாராய விற்பனை என்பது சமூக குற்றம். முற்றிலும் ஒழிக்க இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. கள்ளச்சாராய மரணங்களை திமுக அரசு மூடி மறைக்கவில்லை உடனடி நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இண்டர்போல் உதவி
கோடநாடு வழக்கில் 268 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது 9 மொபைல்போன், 4 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு அழைப்புகள் வந்தள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இண்டர்போல் உதவியுடன் வெளிநாட்டு அழைப்புகள் தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.
வருத்தம்
ஒரு புறம் தேர்தல் தோல்வி, சொந்த கட்சி நெருக்கடியில் சிக்கி அதிமுக தவிக்கிறது. தோல்வி, நெருக்கடியை மறைக்க அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கின்றனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக.,வின் நிலைப்பாடு எனக்கு வருத்தம் அளிக்கிறது. ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். எங்களின் பதிலை கேட்க அதிமுக தயாராக இல்லை. எங்களின் இலக்கில் நாங்கள் வென்று கொண்டே இருப்போம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
மதுவிலக்கு திருத்தச்சட்டம் தாக்கல்
தமிழக சட்டசபையில் மதுவிலக்கு திருத்தச் சட்டமசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். தமிழக மதுவிலக்குச் சட்டம் 1937 ஐ திருத்தம் செய்யும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். குற்றவாளிகளுக்கு பயன்படுத்தப்படும் அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.