நாளைய (30/06) நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பில் பெரும் குழப்பம், இது அடுத்த வாரமும் (07/07) தொடரும்.
29 ஆனி 2024 சனி 07:57 | பார்வைகள் : 3279
கடந்த ஜூன் 9ம் திகதி பிரான்ஸ் நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை அரசதலைவர் Emmanuel Macron அறிவித்தார். அன்றிலிருந்து பல மட்டங்களில் இருந்தும், பலவிதமான விமர்சனங்கள் எழுந்தது. அதில் தேர்தலை நடத்த கால அவகாசம் போதாது என்றும், குறித்த காலகட்டம் ஒரு தேர்தலை நடத்த உரியது அல்ல எனவும் விமர்சிக்கப்பட்டது.
அந்த விமர்சனங்கள் இன்று தேர்தல் வாக்களிப்பை நடத்த பெரும் குழப்பமாக மாறியுள்ளது. கோடைக்கால விடுமுறை ஆரம்பிக்க இன்னும் ஒருவார காலம் இருக்கும் நிலையில் பலர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பே விடுமுறையை கழிக்க விரும்பி இந்த வார இறுதியிலேயே புறப்பட தொடங்கி விட்டார்கள். இதனால் தான் கடந்த தேர்தல்களை விட அதிகமானோர் 'procurations' மாற்று வாக்காளர் முறையை கையில் எடுத்து உள்ளனர் என கூறப்படுகிறது.
அது ஒருபுறமும் இருக்க வாக்குச்சாவடிகளில் கடைமையாற்ற அனுபவம் உள்ள பணியாளர்களுக்கு பெரும் பற்றாக்குறை காணப்படுவதாக பல நகர சபைகள் தெரிவித்துள்ளன.இதனால் பல நகரங்களில் , கிராமங்களில் குறைவான வாக்குச்சாவடிகளே திறக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதனால் வாக்குச்சாவடிகளில் அதிக கூட்டம் நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
எனவே வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் முன்கூட்டியே எந்த வாக்குச்சாவடி திறந்துள்ளது என அறிந்து செல்லுமாறு, முடிந்தவரை திறந்திருக்கும் கால அவகாசத்தை (பெரும் நகரங்களுக்கு, கிராமங்களுக்கும் திறந்து இருக்கும் கால அவகாசம் மாறுபடும்) சரியாக பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.