Val-d'Oise : ஆபத்தான இரசாயனங்களை வைத்திருந்த பெண் உள்ளிட்ட மூவர் கைது!

3 ஆனி 2024 திங்கள் 13:38 | பார்வைகள் : 7839
ஆபத்தான, தடை செய்யப்பட்ட இரசாயனங்களை வைத்திருந்த மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Val-d'Oise மாவட்டத்தின் Montmorency நகரில் இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜூன் 1 ஆம் திகதி, சனிக்கிழமை இரவு 8.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு, துர்நாற்றம் வீசிய வீட்டினை எளிதில் கண்டுபிடித்தனர்.
பல்வேறு வாளிகளில் மிக ஆபத்தான இரசாயனங்கள் நிரப்பப்பட்டு இருப்பதை பார்த்துள்ளனர். அதேவேளை, அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 37 மற்றும் 49 வயதுடைய இரு ஆண்களும், 47 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரசாயணம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிட காவல்துறையினர் மறுத்துள்ளனர். அதேவேளை, அது எங்கிருந்து வந்தது என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.