பாடசாலை மீது தஞ்சமடைந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 27 பேர் பலி
6 ஆனி 2024 வியாழன் 08:09 | பார்வைகள் : 1951
ஐநா பாடசாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய காசாவில் உள்ள ஐநாவின் பாடசாலை மீதே இஸ்ரேல் ஈவிரக்கமின்றி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹமாசின் முகாம் அமைந்திருந்த பகுதியையே தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
நுசெய்ரட் அகதிமுகாமில் உள்ள பாடசாலையின் மேல்தளத்தில் காணப்பட்ட இரண்டு வகுப்பறைகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
அழிக்கப்பட்ட வகுப்பறைகளையும் பிரதே அறையில் பிரேதங்களையும் காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
போதும் நாங்கள் பல தடவை இடம்பெயர்ந்துள்ளோம் உறக்கத்திலிருந்த நான்கு பிள்ளைகளை அவர்கள் கொன்றுவிட்டனர் என காயமடைந்த பெண்ணொருவர் கதறுவதை வீடியோ காண்பித்துள்ளது.
அந்த பகுதியில் ஹமாசின் முகாம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுவதை ஹமாஸ் மறுத்துள்ளது.
அதோடு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையினர் இடம்பெயர்ந்த மக்களிற்கு எதிராக தாங்கள் மேற்கொள்ளும் ஈவிரக்கமற்ற போரை நியாயப்படுத்த கட்டுக்கதைகளை வெளியிடுகின்றனர் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.