பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் நடப்புச் சம்பியன் ஜோகோவிச் வெளியேற்றம்
6 ஆனி 2024 வியாழன் 16:30 | பார்வைகள் : 671
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் நடப்புச் சம்பியனான நோவாக் ஜோகோவிச், காயம் காரணமாக கால் இறுதிப் போட்டியில் பங்குபற்றாமல் இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
37 வயதான சேர்பிய வீரரான ஜோகோவிச், திங்கட்கிழமை (03) நடைபெற்ற 4ஆவது சுற்றுப்போட்டியில் ஆர்ஜென்டீனாவின் பிரான்சிஸ்கோ செருண்டோவை விகிதத்தில் வென்று கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். எனினும், நான்காவது சுற்றுப் போட்டியின்போது ஜோகோவிச் காயமடைந்தார்.
இதனால், புதன்கிழமை (05) நடைபெறவிருந்த கால் இறுதிப்போட்டியில் ஜோகோவிச் பங்குபற்றவில்லை. இப்போட்டியில் நோர்வேயின் கஸ்பர் ரூட்டுடன் ஜோகோவிச் மோதவிருந்தார்.
முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளமை ஸ்கேன் சோதனை மூலம் தெரியவந்துள்ள நிலையில் தான் வாபஸ் பெறுவதாக ஜோகோவிச் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இது குறித்து தான் மிகவும் கவலையடைவதாக அவர் கூறினார்.
'நானும் எனது குழுவினரும் தீவிர கலந்தாலோசனைகளின் பின்னர் இக்கடினமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது' என அவர் கூறினார்.
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸில் 2016, 2021, 2023ஆம் ஆண்டுகளில் சம்பியனானவர் ஜோகோவிச்.
மொத்தமாக 24 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை அவர் வென்றுள்ளார். இச்சாதனையை படைத்த ஒரே ஆண் இவர். பெண்களில் மார்கரெட் கோர்ட்டும் 24 ஒற்றையர் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில், இவ்வருட பிரெஞ்சு பகிரங்க சம்பியன் பட்டத்தை வெல்வதன் மூலம் 25ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று புதிய சாதனை படைப்பதற்கு ஜோகோவிச் காத்திருந்தார்.
ஆனால், இத்தொடரிலிருந்து ஜோகோவிச் வாபஸ் பெற்றுள்ளதுடன், இத்தொடரின் முடிவில் அவர் உலகத் தரவரிசையில் முதலிடத்தையும் இழக்கவுள்ளார்.
கால் இறுதிப் போட்டியிலிருந்து ஜோகோவிச் வாபஸ் பெற்றதால், கஸ்பர் ரூட் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
உலகத் தரவரிசையில் 7ஆவது இடத்திலுள்ள கஸ்பர் ரூட் (25), இதுவரை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சம்பியனானதில்லை. கடந்த வருடம் அவர் பிரெஞ்சு பகிரங்கத் தொடர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சிடம் தோல்வியுற்றிருந்தார்.
2022ஆம் ஆண்டின் பிரெஞ்சு பகிரங்க இறுதிப்போட்டியில் அவர் ரபாயெல் நடாலிடம் தோல்வியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் விம்பிள்டன் மற்றும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் ஜோகோவிச் குணமடைவாரா என்பது தெரியவில்லை.
விம்பிள்டனில் 7 தடவைகள் சம்பியனானவர் ஜோகோவிச்.
விம்பிள்டன் டென்னிஸ் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகள் ரோலண்ட் காரோஸில் ஜூலை 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.