பப்பாளி பழத்திலுள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றித் தெரியுமா..?
8 ஆனி 2024 சனி 13:40 | பார்வைகள் : 1377
ஆண்டு முழுவதும் கிடைக்கும் பப்பாளி பழம் அதன் தனித்துவமான சுவை, அமைப்பு மற்றும் ஆரோக்கிய நலன்களுக்காக அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. ஆனால் பப்பாளி பழத்தை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய ஒரு சில பலன்கள் பற்றி பலருக்கு தெரியவில்லை. அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம்.
வைட்டமின் C : ஒரு மிதமான அளவு பப்பாளி பழத்தில் நமது அன்றாட பரிந்துரைக்கப்பட்ட தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு வைட்டமின் C ஊட்டச்சத்து உள்ளது. வைட்டமின் C நமது நோய் எதிர்ப்பு செயல்பாடு, சரும ஆரோக்கியம் மற்றும் காயங்கள் ஆற்றும் தன்மைகளுக்கு அவசியமாக கருதப்படுகிறது.
வைட்டமின் A : பப்பாளி பழத்தில் குறிப்பாக பீட்டா கரோட்டின் வடிவத்தில் அதிக அளவு வைட்டமின் A உள்ளது. இந்த வைட்டமின் A நமது கண் பார்வை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சரும ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கிறது.
நார்ச்சத்து : உணவு நார்ச்சத்தின் சிறந்த மூலமாக அமையும் பப்பாளி பழமானது நமது செரிமான ஆரோக்கியம், ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்குவது மற்றும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதற்கு உதவுகிறது.
ஃபோலேட் (வைட்டமின் B9) : DNA தொகுப்பு மற்றும் செல்களின் வளர்ச்சிக்கு அவசியமாக கருதப்படும் ஃபோலேட் பப்பாளி பழத்தில் அதிக அளவு உள்ளது. சிசுவின் வளர்ச்சிக்கு உதவக்கூடியதால் இது கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
பொட்டாசியம் : பப்பாளி பழத்தில் குறிப்பிடத்தக்க அளவு பொட்டாசியம் காணப்படுகிறது. இந்த அத்தியாவசிய மினரல் இதய ஆரோக்கியம், சீரான ரத்த அழுத்தம் மற்றும் தசை நரம்பு செயல்பாட்டுக்கு உதவி புரிகிறது.
மெக்னீசியம் : பப்பாளி பழத்தில் காணப்படும் மெக்னீசியம் நமது உடலில் நடைபெறும் நூற்றுக்கணக்கான பயோகெமிக்கல் ரியாக்ஷன்களில் பங்கு பெறுகிறது. அவற்றில் ஆற்றல் உற்பத்தி, தசை செயல்பாடு மற்றும் எலும்பு ஆரோக்கியம் அடங்கும்.
வைட்டமின் E : பப்பாளி பழங்களில் உள்ள வைட்டமின் E கொழுப்பில் கரையும் ஒரு ஆன்டி-ஆக்சிடன்ட். இது ஃப்ரீ ரேடிக்கல்களால் நமது செல்களுக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
வைட்டமின் K : வைட்டமின் K ஊட்டச்சத்தின் சிறந்த மூலமாக பப்பாளி பழம் அமைகிறது. இது ரத்த உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியம்.
லைக்கோபீன் : லைகோபீன் என்ற வலுவான ஆன்டி-ஆக்சிடன்ட் புற்று நோய்கள் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
பப்பாளி பழத்தை நறுக்கி அப்படியே சாப்பிடலாம் என்றாலும் கூட அதனை நீங்கள் ஸ்மூத்தி, சாலட், இனிப்பு வகைகள், சட்னி போன்ற வித்தியாசமான வடிவங்களிலும் சேர்த்து சாப்பிடலாம். குழந்தைகள் பப்பாளி பழத்தை அப்படியே சாப்பிட மறுக்கும் பொழுது அதனை ஸ்மூத்தியாகவோ அல்லது இனிப்பு வகைகளாக நீங்கள் செய்து கொடுக்கும் பொழுது விரும்பி சாப்பிடுவார்கள்.