வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கணுமா?
9 ஆனி 2024 ஞாயிறு 11:56 | பார்வைகள் : 1351
ஒவ்வொருவரும் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். படிப்பு, வேலை, குடும்பம், செலவுகள், சேமிப்பு, எதிர்காலம் போன்ற விஷயங்களைப் பற்றிய பயமும் கவலையும் வாழ்க்கையுடன் சேர்ந்து செல்கிறது. ஆனால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் பற்றி கவலைப்படுவது நல்ல விஷயம் அல்ல. உடல் ஆரோக்கியத்தைப் போலவே மனநலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.
சமீபகாலமாக, வாழ்க்கையில் அனுபவிக்கும் கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவுவதற்காக, நிபுணர்கள் குறிப்பிட்ட வாழ்க்கை மாற்றங்களைப் பகிர்ந்துள்ளனர். அவற்றைப் பின்பற்றுவது ஒருவரின் மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இப்போதெல்லாம் யாரும் மக்களுடன் நேரத்தை செலவிட விரும்புவதில்லை, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் சிலர் தயங்குகின்றனர்.. நிபுணர்களின் கூற்றுப்படி, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் போன்ற உங்களுக்குப் பிரியமானவர்களுடன் தரமான நேரத்தைச் செலவிடுவது மிகவும் முக்கியம். அவர்களுடன் சாப்பிடலாம், வெளியே செல்லலாம், அன்று நடந்த விஷயங்களைப் பேசி நல்ல பந்தத்தை உருவாக்கலாம்.
சுறுசுறுப்பான வாழ்க்கை உங்கள் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துகிறது. இது ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது, மேலும் நமது மன நிலை ஆரோக்கியமாகவும் நேர்மறையாகவும் இருக்கும். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி மற்றும் ஜாகிங் ஆகிய அனைத்தும் ஒருவரைத் தொடர்ந்து நேர்மறையாக வைத்திருக்க இருக்க உதவும்.
நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்க புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது நல்லது. தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது. புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள முயலும்போது, புதியவர்களைச் சந்தித்து நண்பர்களை உருவாக்குவீர்கள். இருப்பினும் ஒருவர் விரும்பாத விஷயங்களைக் கற்றுக்கொள்ளக்கூடாது.
யாராவது நமக்கு ஒரு பரிசை வழங்கும்போது நாம் அனைவரும் நன்றாக உணர்கிறோம். நிபுணர்களின் கூற்றுப்படி, மற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குவது உங்களை மகிழ்ச்சியாக உணர வைக்கும். குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் போன்ற ஒருவருக்கு நீங்கள் சிறிய பரிசுகளை வழங்கலாம். இதன் மூலம் போனஸாக மகிழ்ச்சியைப் பெறலாம்.
"நடந்த விஷயங்களை ஒருபோதும் மாற்ற முடியாது, ஆனால் கடந்து செல்ல முடியும்" என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கடந்த கால தவறுகளை நினைத்து புலம்புவதில் எந்த பயனும் இல்லை. அதேபோல, எதிர்காலத்தைப் பற்றிய கவலைப்படவோ, பயப்படவோ தேவை இல்லை. எனவே, நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள். அப்போதுதான் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.