ஜி-20 நாடுகள் யோசனைப்படி கோடீஸ்வரர்கள் வரி அமல்படுத்தப்படுமா? காங்கிரஸ் கேள்வி
10 ஆனி 2024 திங்கள் 04:49 | பார்வைகள் : 1377
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உலகம் முழுவதும் பெரும் கோடீஸ்வரர்கள், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, உழைக்கும் மக்களை விட குறைவான வரி செலுத்தி வருகிறார்கள். எனவே, 'பெரும் கோடீஸ்வரர்களுக்கு உலகளாவிய குறைந்தபட்ச வரி' விதிக்க நவம்பர் மாதம் பிரேசில் நாட்டில் நடக்கும் ஜி-20 நாடுகள் மாநாட்டில் ஒரு யோசனை முன்வைக்கப்பட உள்ளது.
அதற்கு பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், தென்ஆப்பிரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் நிதி மந்திரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவின் புதிய நிதி மந்திரியும் இந்த யோசனையை ஆதரிப்பாரா? அந்த வரி விதிக்கப்பட்டால், உலகம் முழுவதும் ஆண்டுக்கு ரூ.21 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். முக்கிய திட்டங்களுக்கு அதை பயன்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.