Paristamil Navigation Paristamil advert login

கோஷ்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி எச்சரித்து அனுப்பிய பா.ஜ., மேலிடம்

 கோஷ்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி எச்சரித்து அனுப்பிய பா.ஜ., மேலிடம்

12 ஆனி 2024 புதன் 01:29 | பார்வைகள் : 1078


தமிழக பா.ஜ., நிர்வாகிகள், தங்களின் இஷ்டத்திற்கு பொது வெளியில் கருத்து கூறக்கூடாது; தலைமையின் அறிவுறுத்தலின்படியே செயல்பட வேண்டும் என, கட்சி மேலிடம் எச்சரித்து, கோஷ்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:


தமிழகத்தில் லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையில் கூட்டணி இருந்தது. தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை மற்றும் மாநில செயலர்கள் என, கட்சியில் செல்வாக்கு உள்ள நபர்களுக்கு, 'சீட்' வழங்கப்பட்டது.

பிரதமர் மோடி தீவிர பிரசாரம் செய்ததுடன், திராவிட கட்சிகளின் கட்சியினரை கவனிக்கும், 'பார்முலா'வை பா.ஜ.,வும் பயன்படுத்தியது. அப்படி இருந்தும் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால், தமிழக பா.ஜ., நிர்வாகிகள் மீது, கட்சி தலைமை அதிருப்தி அடைந்துள்ளது.

தேர்தல் தோல்விக்கு பின், தமிழக பா.ஜ.,வை சேர்ந்த சில முக்கிய தலைவர்கள், உள்கட்சி விவகாரம் குறித்து, தங்கள் இஷ்டத்திற்கு கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலிடத்தில் செல்வாக்கு உள்ள நபர்கள் தனி கோஷ்டிகளை உருவாக்கி வருகின்றனர்.

இவை, டில்லி மேலிடத்தின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, அண்ணாமலை, மாநில துணை தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் டில்லி வந்திருந்தனர். அவர்களை, மேலிட தலைவர்கள் அழைத்து பேசினர்.

அப்போது, ஒவ்வொரு நிர்வாகியும் தங்களுக்கு கொடுத்துள்ள கட்சி பணிகளை மட்டுமே செய்ய வேண்டும்; அதை விடுத்து, இஷ்டத்திற்கு பொது வெளியில் பேச கூடாது. மாநில தலைவர் உட்பட அனைவரும் முறையான செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தை நடத்தி, தகவல்களை தெரிவிக்க வேண்டும்; பொது வெளியில் அவசியம் இல்லாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும்.

கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு, அனைவரும் செயல்பட வேண்டும். அதை விடுத்து, ஒவ்வொரு நிர்வாகியும் தங்களுக்கு வேண்டியவர்களுடன் கோஷ்டியாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி முடிவை விமர்சித்து கருத்து கூறுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்