பல்வேறு திட்டங்களால் தமிழகம் முதலிடம்: அறிக்கை வெளியிட்டு அரசு பெருமிதம்
15 ஆடி 2024 திங்கள் 03:22 | பார்வைகள் : 1318
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் மகத்தான திட்டங்களால், நாட்டில் முதல் மாநிலமாக தமிழகம் முன்னேறியுள்ளது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் 2021ல் பொறுப்பேற்ற நாள் முதல், ஓய்வின்றி ஒவ்வொரு நாளும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறார்; புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி வெற்றி கண்டு வருகிறார்.
ஈர்த்து வருகின்றன
பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உட்பட, தமிழகத்தில் வாழும் அனைத்து பிரிவினரும் நல்வாழ்வு பெற, முதல்வர் நிறைவேற்றி வரும் திட்டங்கள், அண்டை மாநிலங்களையும், அயல்நாடுகளையும் ஈர்த்து வருகின்றன.
முதல்வரின் இலவச பஸ் பயண திட்டத்திற்கு, 6,661 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், மாதந்தோறும் 888 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ், 1.15 கோடி பேருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்களுக்கும், உதவித்தொகை கிடைக்க அரசு முயற்சித்து வருகிறது.
அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவியர், உயர் கல்வியை தடையின்றி தொடர, மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக, 2.73 லட்சம் மாணவியர் பயன் பெறுகின்றனர்.
மேம்படுத்தும் பணி
இதேபோல, மாணவர்களுக்கும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும், 'தமிழ் புதல்வன்' திட்டம் விரைவில் துவக்கப்பட உள்ளது. முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் வாயிலாக, 4,000 கோடி ரூபாயில், 10,000 கி.மீ., சாலைகளை இரண்டு ஆண்டுகளுக்குள் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மகத்தான திட்டங்களால், நாட்டில் தமிழகம் முதல் மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.