கெஜ்ரிவாலுக்கு ஆபத்து: ஆம் ஆத்மி புகார்
15 ஆடி 2024 திங்கள் 03:25 | பார்வைகள் : 1221
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலைக்கு கடும் ஆபத்து இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி நேற்று தெரிவித்தது.
இது குறித்து, டில்லி மாநில அமைச்சர் ஆதிஷி செய்தியாளரிடம் கூறியதாவது:
கடுமையான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு மோசமாக குறைந்துள்ளது. கெஜ்ரிவாலை போலி வழக்கில் சதி செய்து, பா.ஜ., சிறையில் அடைத்துள்ளது. அவரது உடல்நிலைக்கு கடும் ஆபத்து உள்ளது. அவரது எடை 8.5 கிலோ குறைந்துள்ளது. அவரது சர்க்கரை அளவு துாக்கத்தின் போது ஐந்து முறை 50க்கும் கீழ் குறைந்துள்ளது. நீரிழிவு நோயாளிகளை பொறுத்தவரை இது ஆபத்தான நிலை.
கெஜ்ரிவாலுக்கு பக்கவாதம் ஏற்பட்டால், மூளை பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு? ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சிறையில் இருப்பதால், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுவது குறித்து, வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நேர்ந்தால், நாடு மட்டுமல்ல; கடவுளும் மன்னிக்கமாட்டார் என்பதை பா.ஜ., அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.