மா.செ.,க்கள் சொல்வதையே கேட்பதால் இ.பி.எஸ்., மீது அ.தி.மு.க.,வில் அதிருப்தி
16 ஆடி 2024 செவ்வாய் 04:48 | பார்வைகள் : 769
அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டங்களில், குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பேச அனுமதிக்கப்படுகின்றனர்; வெளிப்படையாக பேச வாய்ப்பில்லை. இக்கூட்டத்தால் கட்சிக்கு பெரிய பயனில்லை' என, நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து, ஐந்தாம் நாளாக, அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பொதுச்செயலர் பழனிசாமி தலைமை வகித்தார். காலையில், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தது.
நிர்வாகிகள் பேச அனுமதிக்கப்பட்டு, வரும் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் என, கட்சி தலைமை அறிவித்தது. ஆனால், கூட்டத்திற்கு வரும்போதே, மாவட்டச் செயலர்கள் யாரை பேச அனுமதிக்கலாம் என்ற விபரத்தை, கட்சி தலைமைக்கு தெரிவிக்கின்றனர்.
சட்டசபை தொகுதிக்கு இருவர் மட்டும் பேச அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களும் தனிப்பட்ட நபர்கள் குறித்து பேசக் கூடாது. கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பேசக் கூடாது என, தடை விதிக்கப்படுகிறது. இதனால் தேர்தல் தோல்வி குறித்து பேச முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். கூட்டம் பெயரளவுக்கு மட்டுமே நடக்கிறது.
குறுநில மன்னர்கள் போல செயல்படும் மாவட்டச் செயலர்களை தாண்டி, பொதுச்செயலரால் செயல்பட முடியவில்லை. தங்களுக்கு வேண்டிய நபர்களை அருகில் வைத்துக் கொண்டு, மற்றவர்களை புறக்கணிக்கின்றனர்.
கட்சியில் ஒருங்கிணைப்பு இல்லாததுதான், தோல்விக்கு முக்கிய காரணம். ஆனால், அதுகுறித்து கூட்டத்தில் பேச முடியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.