Paristamil Navigation Paristamil advert login

சண்டாளர் என்பது ஜாதி பெயர்: பொதுவெளியில் பயன்படுத்த தடை

சண்டாளர் என்பது ஜாதி பெயர்: பொதுவெளியில் பயன்படுத்த தடை

16 ஆடி 2024 செவ்வாய் 04:49 | பார்வைகள் : 592


சண்டாளர் என்ற ஜாதி பெயரை பயன்படுத்த, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தடை விதித்துள்ளது. மீறி பயன்படுத்துவோர் மீது, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்தியாவில் ஒவ்வொரு ஜாதிக்கும் சூட்டப்பட்டுள்ள பெயர்கள், சமூக மதிப்பையும், அவமதிப்பையும் சுட்டுவதாக இருக்கின்றன.

பெயர் இழிவாக இருப்பதாகக் கருதும் ஜாதிகள், அப்பெயரை மாற்றுவதும், அதற்கு அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடுவதும் தொடர்ந்து நடக்கின்றன.

பிணங்களை அடக்கம் செய்தல் போன்ற பணிகளை செய்யும் சமூக குழுக்களை, இழிவான பெயர்களில் அழைப்பதும், அரசியல் மேடைகளில் பிறரை வசைபாட பயன்படுத்துவதும் உண்டு.

கலை, இலக்கியங்கள், திரைப்பட நகைச்சுவை காட்சிகள், திரைப்பட பாடல்களில் பயன்படுத்துவதும் பரவலாக நடக்கின்றன.

இவை, அப்பெயர்களில் உள்ள மக்களையும், அவர்களை போன்ற மக்களையும் புண்படுத்தும் செயல். இவை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்ற எண்ணமும் மக்களிடம் இல்லை.

தமிழகத்தின் சில பகுதிகளிலும், இந்தியாவிலும், 'சண்டாளர்' என்ற பெயரில் மக்கள் இருக்கின்றனர்.

தமிழகத்தில் பட்டியலின ஜாதியினர் அட்டவணையில், இப்பெயர் 48வது இடத்தில் உள்ளது. பிறரை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பெயர், பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் அழுத்தமாக பேசப்படுவதை காண முடிகிறது.

எனவே, இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ, சண்டாளர் என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது.

அவ்வாறு பயன்படுத்துவோர் மீது பட்டியலினத்தோர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு ஆணையம் பரிந்துரைக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்