16 மாத உச்சம் தொட்ட மொத்த விலை பணவீக்கம்: காரணம் என்ன?
16 ஆடி 2024 செவ்வாய் 04:50 | பார்வைகள் : 1078
கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு, ஜூன் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம் 3.36 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்கள், குறிப்பாக, காய்கறிகளின் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இதற்கு முன், கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 3.85 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. தற்போது 16 மாதங்கள் கழித்து, மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்திலிருந்தே தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளதாவது: கடந்த மே மாதத்தில் 2.61 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம், ஜூன் மாதத்தில் 3.36 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலை மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு, கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கனிம எண்ணெய்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்வு ஆகியவையே, இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்த மே மாதத்தில் 9.82 சதவீதமாக இருந்த உணவுப் பிரிவு பணவீக்கம், கடந்த மாதம் 10.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே வேளையில், காய்கறிகள் பிரிவு பணவீக்கம், மே மாதத்தின் 32.42 சதவீதத்திலிருந்து, ஜூனில் 38.76 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் ஆகியவற்றில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்தே காணப்பட்டது. எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவை தவிர மற்ற அனைத்து பிரிவுகளிலும் பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாதங்கள் பணவீக்கம் (சதவீதத்தில்)
2023ம் ஆண்டு ஜூன் - 4.18% , ஜூலை - 1.36%, ஆகஸ்ட் - 0.52% , செப்டம்பர் - 0.26%, அக்டோபர் - 0.52%, நவம்பர்- 0.39 %, டிசம்பர்- 0.73%.
2024ம் ஆண்டு, ஜனவரி- 0.27%, பிப்ரவரி- 0.20%, மார்ச்- 0.53%, ஏப்ரல்- 1.26%, மே - 2.61%, ஜூன்- 3.36%