Paristamil Navigation Paristamil advert login

ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர்: மாஜிஸ்திரேட் தீபா விசாரணை

ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர்: மாஜிஸ்திரேட் தீபா விசாரணை

16 ஆடி 2024 செவ்வாய் 04:52 | பார்வைகள் : 1023


பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், 52, இம்மாதம் 5ம் தேதி, சென்னை பெரம்பூரில், ரவுடி கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

செம்பியம் போலீசார் வழக்கு பதிந்து, ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னை கிராமத்தைச் சேர்ந்த ரவுடி பாலு, குன்றத்துார் திருவேங்கடம், 33, உட்பட, 11 பேரை கைது செய்தனர். அவர்களை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை கைப்பற்ற, திருவேங்கடத்தை நேற்று முன்தினம் அதிகாலையில், சென்னை மாதவரம் அருகே போலீசார் அழைத்து சென்றனர்.

அப்போது, தப்பி ஓடிய அவர், போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார். தற்காப்புக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது புஹாரி சுட்டதில் பலியானார்.

ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தை, மாதவரம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தீபா ஆய்வு செய்தார். என்கவுன்டர் நடந்த விதம் பற்றி போலீசாரிடமும், அங்கு தடயங்களை சேகரித்த விரல் ரேகை நிபுணர் ரமேஷ் என்பவரிடமும் விசாரித்தார்.

திருவேங்கடம் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவனையில் வைக்கப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் அங்கு சென்ற மாஜிஸ்திரேட், திருவேங்கடத்தின் தந்தை கண்ணன், அக்கா முனியம்மாள், உறவினர் குமார் ஆகியோரிடம், திருவேங்கடத்தின் முந்தைய நடவடிக்கைகள் குறித்தும் விசாரித்தார்.

இறந்தவரின் உடலை அடையாளம் காட்டுமாறு, அவர்கள் மூவரையும் சவ கிடங்கிற்கு அழைத்துச் சென்றார். அவர்கள் திருவேங்கடத்தை அடையாளம் காட்டினர்.

பின், மாஜிஸ்திரேட் முன்னிலையில் இரவு, 12:30 மணியில் இருந்து, அதிகாலை, 3:00 மணி வரை, டாக்டர்கள் பிரியதர்ஷினி, நாராயணன், ராஜேஷ் ஆகியோர் திருவேங்கடத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

அதை, 'வீடியோ' பதிவும் செய்யப்பட்டது. நேற்று காலை, 10:00 மணிக்கு, திருவேங்கடத்தின் உடல், அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மூலக்கொத்தளத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்தனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்