பத்து ஆண்டுகளாக காத்திருக்கும் நடுத்தர வர்க்கம்: மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டாவது நிறைவேறுமா எதிர்பார்ப்பு?
20 ஆடி 2024 சனி 06:05 | பார்வைகள் : 949
கடந்த 10 ஆண்டுகளாக, ஒவ்வொரு மத்திய பட்ஜெட் தாக்கலின்போதும், தங்களுக்கு ஏதாவது சலுகைகள் கிடைக்காதா என, காத்துக்கிடக்கிறது நடுத்தர வர்க்கம்.
'மத்திய அரசால், நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக மாதச் சம்பளதாரர்களுக்கு பயன் இல்லை. மாறாக வரிச்சுமைதான் அதிகரித்திருக்கிறது' என்ற கருத்து அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக, எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.
மத்திய அரசு மீதான நடுத்தர வர்க்கத்தினரின் குற்றச்சாட்டுகளில் வருமான வரி உச்சவரம்பு, வரிச்சலுகை, வீட்டுக்கடன் மீதான சலுகை ஆகியவற்றில், பணவீக்கத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யாதது முக்கிய இடம் பிடிக்கின்றன.
வருமான வரி உச்சவரம்பு 2014ல், ரூ. 2.5 லட்சம். 10 ஆண்டுகளாக இதில் மாற்றம் செய்யப்படவே இல்லை. 2001ல் வருமான வரி உச்சவரம்பு ரூ.1.25 லட்சம். இது அன்றைய மதிப்பில் 145 கிராம் தங்கம். தற்போது ரூ.2.5 லட்சம்; 35 கிராம் தங்கத்தைத்தான் வாங்க முடியும்.
கடந்த, 2014ல் இருந்து பண வீக்கம் 46 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. பண வீக்கத்துக்கு ஏற்றாற்போல், வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது மத்திய வர்க்கத்தினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
2020ல் வருமான வரி உச்சவரம்பு (புதிய முறைப்படி) ரூ.7 லட்சமாக மாற்றப்பட்டிருந்தாலும், பெரும்பாலான சலுகைகள், விலக்குகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டுக்கான வரம்பு ரூ. 8 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
வரிச் சலுகை
2014ல், பி.பி.எப்., - என்.எஸ்.சி., ஆயுள் காப்பீடு உள்ளிட்ட முதலீடுகளுக்கு, பிரிவு 80 சியின் கீழ், ரூ.1.5 லட்சம் வரை விலக்கு; பிரிவு '80 டி' பிரிவில், ரூ. 25,000 வரை விலக்கு இருந்தது. இந்த இரண்டும் தற்போது வரை உயர்த்தப்படவில்லை. நடுத்தரவர்க்கத்தினரின் சேமிக்கும் மனப்பாங்கை அரசு ஊக்குவிப்பதாக இல்லை. இது, மத்திய அரசின் மீதான கோபமாக மாறியிருக்கிறது.
வீட்டுக் கடன்
வீட்டுக் கடன் மீதான வருமான வரிச் சலுகையைப் பொறுத்தவரை 2014ல், '80 சி' பிரிவில் ரூ. 1.5 லட்சம்வரை விலக்கு. பிரிவு 24ல், ரூ. 2 லட்சம் வரை விலக்கு இருந்தது. இதிலும் எவ்வித மாற்றமும் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன், வீடு, மனைகளின் விலை. கட்டுமானப் பொருட்களின் விலை ஆகியவற்றை தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட்டால், எவ்வளவு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்?
இதுதவிர, சிறு 'ஈகுவிட்டி' முதலீட்டாளர்களுக்கான நீண்டகால மூலதன ஆதாய வரிச்சலுகை நீக்கம், ஈகுவிட்டி வைத்திருப்போருக்கு டிவிடண்டுகளுக்கு வரி, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, டோல் கேட் கட்டணங்கள் என, மத்திய வர்க்கத்தினரை நேரடியாக பாதிக்கும் பல்வேறு வரிகளும் கட்டண உயர்வுகளும் நடுத்தர வர்க்கத்தினரை கொந்தளிப்பான மனநிலையில் வைத்திருக்கின்றன. இவற்றை கவனத்தில் கொண்டு வரும் பட்ஜெட்டில் மத்திய அரசு தீர்வு தர வேண்டும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இக்குற்றச்சாட்டுகள் குறித்து ஆடிட்டர் கார்த்திகேயனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை என, கூறிவிட முடியாது. வருமான வரியைப் பொறுத்தவரை குறைந்த வருவாய் பிரிவினருக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக ரூ.7 லட்சம் வரை வரி இல்லை. தற்போது பழைய மற்றும் புதிய என இரு வரி முறைகள் (ரெஜிம்) உள்ளன. புதிய வரி முறையில், ரூ. 15 லட்சத்துக்கும் மேல்தான் 30 சதவீதம் வரி. ஆனால், பழைய முறையில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் சென்றாலே 30 சதவீதம் வரி இருந்தது.
முதலீடுகளை ஊக்கப்படுத்தும் சலுகைகள் இல்லை என்பது உண்மைதான். பழைய முறையில், முதலீடுகளுக்காக 80 சி, 80 டி, பி.பி.எப்., என்.எஸ்.சி., நன்கொடை போன்றவற்றுக்கு ரூ.1.5 லட்சம் வரை விலக்கு உள்ளது.
பணவீக்கத்துக்கு ஏற்ப இது நீண்ட காலமாக மாற்றப்படவில்லை என்பது பெரும் குறை. முதலீடுகளை ஊக்குவிக்கும் சலுகைகள் இல்லாவிட்டால், சேமிக்கும் பழக்கம் குறையும். அரசின் போக்கு, நம்மை சேமிப்புக் கலாச்சாரத்தில் இருந்து செலவு அல்லது நுகர்வுக் கலாச்சாரத்துக்கு மாற்றுவதாக உள்ளது. ஆசியா, சேமிப்புக் கலாச்சாரத்தைச் சேர்ந்தது.
அமெரிக்கா போன்ற நாடுகளே, நுகர்வுக் கலாசாரத்தில் இருந்து சேமிக்கும் கலாசாரத்தை நோக்கி சென்று கொண்டுள்ளன.
பெரும்பாலான நாடுகள், பணவீக்கத்துக்கு ஏற்ப ஆண்டுதோறும் வருவானவரி உச்சவரம்பை அதிகரித்துள்ளன. அவ்வாறு செய்தால், பெரும்பாலானவர்கள் வருமானவரி வலையில் இருந்து விலகிச் சென்றுவிடுவார்கள் என்ற ஐயப்பாட்டில், நமது அரசு உச்சவரம்பை அதிகரிக்காமல் இருப்பது சரியான அணுகுமுறை அல்ல.
இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினர். எனவே, வரும் பட்ஜெட்டில் இதை அரசு சரி செய்யும் என நம்புகிறேன். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு
சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தினர். மத்திய பா.ஜ., அரசு 10 ஆண்டுகளாக தங்களை வஞ்சித்து வருவதாக இவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதால், இது ஒட்டு மொத்த நடுத்தர மக்களின் குரலாக எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.