நல்லூரில் போராட்டத்திற்கு தயாராகும் வைத்தியர் அர்ச்சுனா
23 ஆடி 2024 செவ்வாய் 09:20 | பார்வைகள் : 2348
எதிர்வரும் புதன்கிழமைக்குள் குற்றம் சாட்டப்பட்ட வைத்தியர்களுக்கு எதிராக சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு இல்லையெனில் மக்களின் போராட்டம் நல்லூருக்கு மாற்றப்படும் எனவும் அதில் தன்னை ஆகுதியாக்க தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேஸ்புக் நேரலையில் பேசிய அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
“வைத்தியர்கள் ஒருநாளும் வைத்திய கடமைகளில் இருந்து பிறழவில்லை. எனினும், பண விடயத்தில் அவர்கள் தவறிழைத்திருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, சில வைத்தியர்கள் பொது வெளியில் பேசும் கருத்துகள் அனைத்து வைத்தியர்களையும் பாதிப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் வைத்தியர்கள் மனதளவில் பாதிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், மருந்து வழங்கும் போது பிழைவிடலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியர்களுக்கு எதிராக சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதன் கிழமை வரை பொறுமையாக இருப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வியாழக்கிழமை நல்லூரில் சந்திப்போம் எனவும் அங்கு மக்கள் போராட்டம் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகள் கதிரைகளில் இருந்துகொண்டு அறிக்கையை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
எனவே இந்த போராட்டத்தை மக்கள் போராட்டமாக கொண்டுச் சென்று மீண்டும் ஒரு வரலாற்றை ஏற்படுத்த முடிவெடுத்துவிட்டேன்.
என்னை யாழ்ப்பாணத்திற்கு வரவிடாமல் தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.