நீட் வினாத்தாள் கசிவு எப்படி?: சி.பி.ஐ., புதிய தகவல்
26 ஆடி 2024 வெள்ளி 08:20 | பார்வைகள் : 887
நீட் நுழைவுத் தேர்வின்போது, வினாத்தாள் கசிவில் ஈடுபட்ட கும்பல் எப்படி செயல்பட்டது என்பது குறித்த புதிய தகவல்களை, சி.பி.ஐ., வெளியிட்டுள்ளது.
இந்தாண்டு நடந்த இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வின்போது, வினாத்தாள் கசிவு உட்பட பல மோசடிகள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் இந்த மோசடி நடந்துள்ளது உறுதியாகி உள்ளது.
இது குறித்து சி.பி.ஐ., நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது:
தேர்வு நடந்த ஒயாசிஸ் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஈஷானுல் ஹக், அந்த நகரின் தேசிய தேர்வு முகமையின் ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். இவரையும், பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் இம்தியாஸ் ஆலமையும், இந்த மோசடியின் முக்கிய நபரான பங்கஜ் குமார் தொடர்பு கொண்டுள்ளார். இவர்கள் மூவரும் இணைந்து, தேர்வு நடந்த மே, 5ம் தேதி காலையில் பாதுகாப்பு பெட்டியில் இருந்து வினாத்தாளை எடுத்து படம்பிடித்துள்ளனர்.
இதற்கிடையே, பீஹாரின் சில பிரபலமான மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலரை, ஹசாரிபாகில் ஒரு இடத்தில் தங்க வைத்திருந்தனர். வினாத்தாள்களுக்கு அந்த மாணவர்கள் விடைகள் அளித்துள்ளனர்.
தன் ஆட்கள் வாயிலாக, பணம் கொடுத்த, நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவை பகிரப்பட்டுள்ளன. இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள பங்கஜ் குமார், தேர்வு நடந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் மற்றும் வினாக்களுக்கு விடை எழுதித் தந்த மாணவர்கள், அவற்றை விலைக்கு வாங்கிய மாணவர்கள் என, 35க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.