ஒலிம்பிக் 2024 : கேள்விகளும்.. பதில்களும்..!
26 ஆடி 2024 வெள்ளி 08:26 | பார்வைகள் : 4467
ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஜூலை 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றன. இவ்வருட ஒலிம்பிக்கில் பல மாறுதல்கள், சுவாரஷ்ய நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. அவற்றினை கேள்வி-பதில்களாக தொகுத்துள்ளோம்..!!
‘இவ்வருட ஒலிம்பிக்கில் இரண்டு விளையாட்டுக்கள் இணைக்கப்படவில்லையாமே?’‘
'ஆமாம். பேஸ்போல் (baseball) மற்றும் மென்பந்து (Softball) ஆகிய இரு விளையாட்டுக்களும் இம்முறை இல்லை. 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் கொவிட் 19 காரணமாக, 2021 ஆம் ஆண்டு ஜப்பானில் இடம்பெற்றது. அதன்போது இந்த இரு போட்டிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. அது இம்முறையும் தொடர்கிறது. ஆனால் அடுத்த ஒலிம்பிக்கில் (2028) அப்போட்டிகள் மீண்டும் இணைக்கப்படும்.
’எத்தனை நாடுகள் இம்முறை ஒலிம்பிக்கில் கலந்துகொள்கின்றன?’‘
'இம்முறை, 206 நாடுகள் கலந்துகொள்கின்றன. ஆபிரிக்க கண்டத்தில் இருந்து 54 நாடுகளும், ஐரோப்பிய கண்டத்தில் இருந்து 48 நாடுகளும், ஆசியாவில் இருந்து 44 நாடுகளும், 41 அமெரிக்க நாடுகளும், ஓசியானியாவைச் சேர்ந்த 17 நாடுகளும் பங்கேற்கின்றன.’
’கராத்தே போட்டிகள் உண்டா?’‘
'இல்லை. அதை ஒலிம்பிக் குழுமம் அங்கீகரித்தாலும், இம்முறை ஒலிம்பிக்கில் இணைக்கவில்லை!’
‘ஒலிம்பிக் நுழைவுச் சிட்டைகளை எங்கு வாங்குவது..?’‘
'ஒலிம்பிக் நுழைவுச் சிட்டைகளை paris2024.org எனும் இணையத்தளமூடாக பெற்றுக்கொள்ள முடியும். சென்ற வாரம் வரை 10 மில்லியன் நுழைவுச் சிட்டைகள் விற்பனையாகியிருந்தன.’
’இம்முறை பிரான்சில் நடைபெறுகிறது என்பதால், பிரெஞ்சு தெரிந்திருக்க வேண்டுமா..?
‘அப்படியில்லை. எந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் ஆங்கில மொழி பிரதானம். அதன் பின்னர் இரண்டாவது மொழியாக ஒலிம்பிக்கை நடாத்தும் நாட்டின் தேசிய மொழி இணைக்கப்படும். எனவே இம்முறை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு உத்தியோகபூர்வ மொழிகளாக உள்ளன. எந்த அறிவிப்புகளையும் இவ்விரு மொழிகளிலும் அறிந்துகொள்ள முடியும். அது தவிர தொடருந்து நிலையங்களில் நிற்கும் உதவியாளர்கள் A.I தொழில்நுட்ப உதவியுடன் 17 மொழிகளில் உங்களுக்கு தேவையான பதில்களை அளிக்க தயாராக இருக்கின்றனர்.’
’எத்தனை விளையாட்டுக்கள் இம்முறை இடம்பெறும்?’
‘இம்முறை, வெவ்வேறு பிரிவுகளில் 32 வித்தியாசமான போட்டிகள் இடம்பெற உள்ளன. இம்முறை புதிதாக ’breaking ’ நடனப்போட்டியும் உண்டு.
’இரஷ்யாவுக்கு என்ன நடந்தது..?’
‘இரஷ்யா உக்ரேனுடனான யுத்தத்தில் போர் விதிகளை மீறி செயற்பட்டு வருவதால், இம்முறை இரஷ்யா இணைத்துக்கொள்ளப்படவில்லை.
‘எவ்வளவு செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது..?’
‘ஒலிம்பிக் போட்டிகள் இம்முறை 7.3 பில்லியன் யூரோக்கள் (8 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலவில் இம்முறை தயாரிக்கப்பட்டுள்ளது.
’பிரான்சில் ஒலிம்பிக் இடம்பெறுவது இது எத்தனையாவது முறை..?’
‘இதுவரை ஐந்து தடவைகள் ஒலிம்பிக் போட்டிகளை பிரான்ஸ் நடாத்தியுள்ளது. 1900, 1924, 1924 (குளிர்கால, கோடைகால போட்டிகள் இரண்டையும் பிரான்சே நடாத்தியிருந்தது) 1968, 1992 ஆகிய ஐந்து தடவைகளுடன், இம்முறை 2024 ஆம் ஆண்டில் பிரான்ஸ் ஆறாவது தடவையாக ஒலிம்பிக்கை நடாத்துகிறது.
‘இஸ்ரேல், பாலஸ்தீனம் இணைத்துக்கொள்ளப்படுகிறதா..?’’
'ஆம். இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்தில் பிரான்ஸ் இஸ்ரேல் பக்கம் நிற்பது அறிந்ததே. என்றபோதும் இரு நாடுகளும் இம்முறை ஒலிம்பிக்கில் கலந்துகொள்கிறது.’
‘ஆரம்ப மற்றும் நிறைவு நிகழ்வுகள் எங்கே இடம்பெறுகிறது..?’‘
இன்று ஜூலை 26, வெள்ளிக்கிழமை Jardins du Trocadéro மற்றும் சென் நதியில் ஆரம்பமாகும் நிகழ்வு, ஓகஸ்ட் 11 ஆம் திகதி Stade de France அரங்கில் நிறைவடையும்.