ஒலிம்பிக் போட்டிகளின் முதல்நாளில்... பல்வேறு போகுவரத்துக்கள் பாதிப்பு.. மக்கள் அவதி!
28 ஆடி 2024 ஞாயிறு 04:42 | பார்வைகள் : 3099
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பநாள் நிகழ்வின் போது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் TGV அதிவேக தொடருந்து சேவைகள் தடைப்பட்டிருந்தமை அறிந்ததே. இந்நிலையில், நேற்று முதல் நாள் போட்டிகள் ஆரம்பமான நாளில், இல் து பிரான்சுக்குள் பல்வேறு பொது போக்குவரத்துக்கள் தடைப்பட்டன.
நேற்று பகல், 13 ஆம் இலக்க மெற்றோக்கள் தடைப்பட்டு, பயணிகள் சுரங்கம் வழியாக வெளியேற்றப்பட்டிருந்தார்கள். அது தொடர்பான எமது முழுமையான செய்தியை ‘இங்கே’ அழுத்துவதன் ஊடாக படிக்கலாம்.
அதைத் தொடர்ந்து, எட்டாம் இலக்க மெற்றோ ( ligne 8) சேவைகளில் ஒரு பகுதி தடைப்பட்டது. குறிப்பாக Opéra நிலையம் அருகே தண்டவாளத்தில் பலர் இருந்ததாகவும், அதனால் அங்கு போக்குவரத்து தடைப்பட்டதாகவும், காவல்துறையினரின் தலையீட்டின் பின்னர் போக்குவரத்து சீரடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறாம் இலக்க மெற்றோ ( ligne 6 ) சேவைகள் நேற்று மாலை தடைப்பட்டது. Kléber நிலையத்தில் பலர் தண்டவாளத்தில் நின்றிருந்ததாகவும், அதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொழில்நுட்ப பழுது காரணமாக RER C சேவைகள் Versailles-Château-Rive-Gauche முதல் Chaville-Vélizy நிலையம் வரையும், Chaville-Vélizy முதல் Saint-Quentin-en-Yvelines நிலையம் வரையும் தடைப்பட்டதாக அறிய முடிகிறது.
நேற்று இரவு, இரண்டாம் இலக்க மெற்றோ தடைப்பட்டது. Pigalle நிலையத்தில் இடம்பெற்ற விபரங்கள் குறிப்பிடப்படாத ‘அசம்பாவிதம்’ காரணமாக போக்குவரத்து தடைப்பட்டதாக RATP அறிவித்துள்ளது.
RER A சேவைகள் தொழில்நுட்ப பழுது காரணமாக Maisons-Laffitte நிலையத்தில் நீண்ட நேரம் தரித்து நின்றது.
இவ்வாறாக ஒலிம்பிக் போட்டிகளின் முதல்நாள், போக்குவரத்துக்கள் பெரும் சீர்குலைவாக இருந்தது. இதனால் ஒலிம்பிக் போட்டிகளைக் காணச் சென்ற மக்கள் பெரும் அவதியினைச் சந்தித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.