மக்கள் அரசாங்கத்தை அமைக்க புது கட்சி துவக்கினார் பிரசாந்த் கிஷோர்
28 ஆடி 2024 ஞாயிறு 16:15 | பார்வைகள் : 1220
பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வெற்றி வியூகங்களை வகுத்து தந்த தேர்தல் மன்னன் பிரசாந்த் கிஷோர் மக்கள் அரசாங்கத்தை அமைக்க புது கட்சி ஒன்றை துவக்கி உள்ளார்.
பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அம் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் அந்ததேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய கட்சி ஒன்றை துவக்கி உள்ளார்.
தலைநகர் பாட்னாவில் தனது அமைப்பான ஜன் சூராஜ் அபியான் நிர்வாகிகள் மத்தியில் பேசுகையி்ல் அவர் கூறியதாவது: புதிய கட்சி வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி துவங்கப்படும். தனது கட்சி மக்கள் அரசாங்கத்தை அமைக்கும் எனவும் முதல் நாளிலேயே ஒரு கோடி உறுப்பினர்களை கொண்ட முதல் கட்சியாக ஜன் சூராஜ் கட்சி இருக்கும். புதிய கட்சி வரலாற்றில் இடம் பிடிக்கும் என்றார்.
இந்தக் கட்சி எந்தவொரு குறிப்பிட்ட சாதி, குடும்பம் அல்லது சமூகத்துக்குள் நின்றுவிடாது என்று அவர் கூறினார். இது பீகார் மக்களின் கூட்டு முயற்சியாக இருக்கும்.
புதிய கட்சியின் நிர்வாகிகளாக 1.5 லட்சம் பேர் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.தான் கட்சியை வழிநடத்தப் போவதில்லை என்றும், தலைவர்கள் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் தெளிவுபடுத்தினார்.
மேலும் கட்சியின் தலைமை ஐந்து சமூகக் குழுக்களிடையே ஒப்படைக்கப்படும் என்றும், பொதுப் பிரிவை சேர்ந்த ஒரு தலைவர் ஓராண்டு பதவியில் இருப்பார்.அதைத் தொடர்ந்து ஓபிசியில் இருந்து ஒரு தலைவர் மற்றொரு வருடம் பதவி வகிப்பார் என்று கிஷோர் கூறினார்.
இதனையடுத்து 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் 8 இடங்களில் மாநில அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.