கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 107ஆக உயர்வு - மீட்பு பணிகள் தீவிரம்
30 ஆடி 2024 செவ்வாய் 13:31 | பார்வைகள் : 1016
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.
இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது. அட்டமலையில் இருந்து முண்டகை பகுதியை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இதனால், தனித்தீவில் சிக்கியது போல 500 வீடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டிக்கொண்டனர். நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 107 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலரின் நிலை என்னவென்று தெரியாததால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.