Paristamil Navigation Paristamil advert login

மேகதாது விவகாரம் தம்பிதுரையின் கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதில்

மேகதாது விவகாரம் தம்பிதுரையின் கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதில்

31 ஆடி 2024 புதன் 01:17 | பார்வைகள் : 786


காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரம் தற்போது எந்த அளவில் உள்ளது என ராஜ்யசபாவில் அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ராஜ்பூஷன் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு மத்திய அரசிடம் முன்மொழிந்து கர்நாடக அரசு கோரிக்கை வைத்திருந்தது.

பெங்களூரு நகரத்துக்கான குடிநீர் வினியோகம் மற்றும் மின் உற்பத்தி ஆகிய தேவைகளுக்காக இந்த திட்டம் தேவை என, கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

இத்திட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக இந்த திட்டம் இருப்பதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உரிமை ஆகியவை பாதிக்கப்படும் என்றும், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து, மத்திய அரசுக்கு கர்நாடகா அனுப்பி இருந்தது.

இதற்கு கடந்த 2018ல் மத்திய நீர்வள கமிஷன் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்த கர்நாடக அரசின் அந்த விரிவான திட்ட அறிக்கையானது, அடுத்த கட்டமாக காவேரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு மத்திய நீர்வள கமிஷனால் அனுப்பிவைக்கப்பட்டது.

காவிரி நதி நீர் ஆணையத்தின் 28வது ஆலோசனை கூட்டத்தில், மேகதாது அணை குறித்த இந்த விரிவான திட்ட அறிக்கை பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

அப்போது, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

அப்போது அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், தொழில்நுட்பம் சார்ந்த விபரங்கள் மற்றும் பொருளாதார அம்சங்கள் குறித்து ஆராய்வதற்காக, மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கான விரிவான அறிக்கையை மத்திய நீர்வள கமிஷனுக்கே மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்