இன்று முதல் அமலாகிறது பாஸ்டேக் புதிய நடைமுறை
1 ஆவணி 2024 வியாழன் 03:21 | பார்வைகள் : 553
வாகனங்களுக்கான 'பாஸ்டேக்' தொடர்பான சில நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இவை, இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு காத்திருப்பதை குறைக்கவும், மோசடிகளை தடுக்கவும், பாஸ்டேக் முறை அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, பாஸ்டேக் ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்படும். இதன் வாயிலாக, நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்.
சுங்கச்சாவடிகளில் காத்திருந்து பணம் செலுத்துவதை தவிர்க்கவும், நேரம் விரயமாவதை தடுக்கவும் இந்த நடைமுறை அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது பாஸ்டேக் சேவையை, பல்வேறு வங்கிகள் அளிக்கின்றன.
என்.பி.சி.ஐ., எனப்படும் தேசிய பண பரிவர்த்தனை வாரியம், இது தொடர்பான சில நடைமுறைகளை அறிவித்துள்ளது. இவை, இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
இதன்படி, பாஸ்டேக் பயன்படுத்துவோர், கே.ஒய்.சி., எனப்படும் தங்களுடைய சுயவிபரக் குறிப்புகளை தெரிவிக்க வேண்டும். வரும், அக்., 31க்குள் இந்த விபரங்களை, பாஸ்டேக் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெற வேண்டும். இல்லாதபட்சத்தில், அந்த பாஸ்டேக் செல்லாததாகிவிடும்.
கடந்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் பாஸ்டேக் வாங்கியவர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும். அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் பாஸ்டேக் வாங்கியிருந்தால், அதை புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
வாகனங்களின் பதிவு எண், சேசிஸ் எண் ஆகியவற்றை, பாஸ்டேக் உடன் இணைக்க வேண்டும். மேலும், வாகனத்தின் உரிமையாளரின் மொபைல் போன் எண்ணும் இணைக்கப்பட வேண்டும்.