தொடரும் கள்ளச்சாராய மரணம்: இ.பி.எஸ்., அன்புமணி கண்டனம்
4 ஆடி 2024 வியாழன் 12:38 | பார்வைகள் : 1713
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடு மறைவதற்குள், விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மரக்காணம், கருணாபுரம் சம்பவத்திற்கு பிறகும் முதல்வர் ஸ்டாலின் பாடம் கற்றுக்கொள்ளவில்லை' என அதிமுக., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார். பாமக., தலைவர் அன்புமணி, கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
அவரது அறிக்கை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடு மறைவதற்குள் மற்றுமொரு கள்ளச்சாராய மரணம் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன.
சம்மந்தப்பட்ட இடத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்ட காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்ட, பிறகும், இந்த திமுக அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாகவே இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணமும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரமும் கண்ட பிறகும் எந்த பாடமும் ஸ்டாலின் கற்றுக்கொள்ளவில்லை.
உங்கள் விடியா அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது?. கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து விழுப்புரம் சரகத்தில் நடைபெறுவதற்கு காரணமான நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
என்ன நிர்வாகம்
நிருபர்களை சந்தித்த பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியதாவது: விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் இறந்துள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த 10 நாளில் பக்கத்து மாவட்டத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு நடந்தது என்றால் முதல்வர் என்ன நிர்வாகம் செய்கிறார். இரும்புகரம் கொண்டு ஒடுக்குவேன் என்கிறார். இது தான் இரும்பு கரமா? அசிங்கமாக உள்ளது. நடவடிக்கை எடுங்கள் அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள்.
சிபிசிஐடி மீது மரியாதை உள்ளது. ஆனால் நம்பிக்கை இல்லை. கள்ளச்சாராய விவகாரத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் சம்பந்தப்பட்டு உள்ளனர். விற்கிறவர்கள், காய்ச்சுபவர்களை கைது செய்துவிட்டு முடிந்துவிட்டது என போகப் போகிறீர்கள். கள்ளச்சாராயம் காய்ச்ச உடந்தையாக இருந்தது யார் என அனைவருக்கும் தெரியும். ஆனால், முதல்வருக்கு தெரியாதா? எங்களுக்கு சிபிஐ விசாரணை வேண்டும். அரசியல் செயய தேவையில்லை. அடுத்தடுத்து நடக்காமல் தடுப்பதற்கு சிபிஐ விசாரணை தேவை. இவ்வாறு அன்புமணி கூறினார்.