Paristamil Navigation Paristamil advert login

பெரில் புயலின் தாக்கம் - ஜமைக்காவில் 9 பேர் பலி

பெரில் புயலின் தாக்கம் - ஜமைக்காவில் 9 பேர் பலி

4 ஆடி 2024 வியாழன் 15:54 | பார்வைகள் : 1248


பெரில் புயலால் ஜமைக்காவில் 9 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக புதிய புயல் சின்னம் உருவானது. இந்த புயலுக்கு 'பெரில்' என பெயரிடப்பட்டது.

புயலின் நகர்வை தென் அமெரிக்கா, கரிபீயன் தீவு நாடுகளை சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். வெனிசுலா நாட்டையொட்டி உருவான இந்த புயல் கரீபியன் தீவுகள் வழியாக மெக்சிகோவில் கரையை கடக்கும் என கூறப்பட்டது.

எனவே, வெனிசுலா, கரீபியன் நாடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதனால் மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகளை கடற்கரையில் பத்திரமாக கட்டி வைத்தனர். இதனிடையே 'பெரில்' புயல் வெனிசுலா மற்றும் கரீபியன் தீவு நாடுகளில் தாக்கியது.

புயல் கடந்து செல்லும் இடங்களில் எல்லாம் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. வெனிசுலா, ஜமைக்கா, பார்படாஸ் உள்ளிட்ட நாடுகள் கடும் சேதத்தை சந்தித்தன. இதனால் அங்கே சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

கடற்கரையையொட்டி அமைந்திருந்த நகரங்களில் மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை சாய்ந்தன. 

மின்சார வினியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் பாதிப்பு ஏற்பட்டதால் புயல் தாக்குதலுக்கு ஆளான நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிப்படைந்தனர். புயல் பாதிப்புக்கு ஜமைக்காவில் 9 பேர் பலியாகி உள்ளனர்.


வெனிசுலாவில் 3 பேர், கிரேனடா தீவில் 3 பேர், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரேனடைன்ஸ் தீவில் ஒருவர் பலியாகி உள்ளனர். 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.

அதேவேளை பெரில் புயல் நாளை மெக்சிகோவை ஒட்டி கரையை கடக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்