உறுதிமொழி ஏற்பதில் சபாநாயகர் உத்தரவு !
5 ஆடி 2024 வெள்ளி 05:17 | பார்வைகள் : 1784
எம்.பி.,க்கள் பதவி ஏற்கும்போது வாசிக்கும் உறுதிமொழியுடன் வேறு எந்த வார்த்தையும் சேர்க்கக் கூடாது என லோக்சபா விதிகள் திருத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.,க்கள் கடந்த மாதம் 24, 25ல் பதவி ஏற்றனர். குறிப்பில் இருந்த பதவியேற்பு உறுதிமொழியை மட்டும் வாசிக்காமல், இஷ்டத்துக்கு கோஷங்களை அள்ளிவிட்டனர்.
பா.ஜ., உறுப்பினர்கள் பலர், 'ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஜகந்நாத், பாரத் மாதாகி ஜே, ஜெய் ஹிந்து ராஷ்டிரா' என முழங்கினர்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் 'ஜெய் சம்விதான்' என அரசியல் சாசனத்துக்கு வாழ்த்து கூறி பதவியேற்றனர். 'கோஷங்கள் எழுப்ப வேண்டாம்' என இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் விடுத்த வேண்டுகோளை எவரும் கண்டுகொள்ளவில்லை.
மேற்கு வங்க எம்.பி.,க்கள், 'ஜெய் பங்களா' என்றனர். தெலுங்கானாவின் அசாதுதீன் ஓவைசி, 'ஜெய் பீம், ஜெய் மிம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம்' என்று வரிசையாக வாழ்த்துகளை அடுக்கினார்.
உச்சமாக, தமிழக எம்.பி.,க்கள் எழுப்பிய கோஷங்கள் வேறு ரகம். தாய் - தந்தை பெயரை குறிப்பிட்டும், சொந்த ஊர், தாலுகா, மாவட்டம் பெயரை குறிப்பிட்டும் சிலர் பதவி ஏற்றனர்.
சிலர் அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி பெயர்களை கூறி வாழ்க கோஷமிட்டனர். மேலும் சிலர் தங்களுக்கு சீட் வாங்கிக் கொடுத்த தமிழக அமைச்சர்களின் பெயர்களை கூறி விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.
இந்த செயல்கள், லோக்சபாவின் மாண்பை சீர்குலைத்ததாக சீனியர் எம்.பி.,க்கள் வருந்தினர். சபைக்கு என்று தனி கண்ணியம் உள்ளது, அதை கட்டிக்காக்க வந்துள்ள இவர்கள் இஷ்டத்துக்கு கோஷம் போட்டு, வேடிக்கை மன்றமாக மாற்றுகின்றனரே என ஆதங்கப்பட்டனர்.
சபாநாயகர் பிர்லாவும் சபையில் தன் கவலையை தெரிவித்தார். இதற்கு தீர்வு காணப்படும் என்று கூறினார். அதன்படி, பதவியேற்பு விதிகளில் சில திருத்தங்களை சபாநாயகர் அறிவித்துள்ளதாக லோக்சபா செயலகம் நேற்று தெரிவித்தது.
ஏற்கனவே உள்ள விதிகளுடன், மூன்று உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்து மொழிகளிலும் அச்சிட்டு வழங்கப்படும் தாளில் உள்ள வாசகங்களை மட்டுமே உறுப்பினர்கள் வாசித்து பதவி ஏற்க வேண்டும்.
உறுதிமொழி வாசிக்கும்போதும், அதற்கு முன்பும், பின்பும் கூடுதலாக எந்த வார்த்தையோ, பெயரோ, கோஷமோ உச்சரிக்க கூடாது என உறுதியாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
அவ்வாறு சேர்த்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை சபாநாயகர் உத்தரவு விளக்கவில்லை. எனினும், உள்ளது உள்ளபடி உறுதிமொழியை வாசித்தால் மட்டுமே உறுப்பினரின் பதவியேற்பு செல்லுபடியாகும் என்பது உத்தரவின் உள்ளர்த்தம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.