Paristamil Navigation Paristamil advert login

ஹத்ராஸ் சம்பவம்: தாமதிக்காமல் கூடுதல் இழப்பீடு வழங்க ராகுல் கோரிக்கை

ஹத்ராஸ் சம்பவம்: தாமதிக்காமல் கூடுதல் இழப்பீடு வழங்க ராகுல் கோரிக்கை

5 ஆடி 2024 வெள்ளி 05:19 | பார்வைகள் : 1564


ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தாமதம் ஏற்பட்டால், அது யாருக்கும் பயனளிக்காது, விரைந்து வழங்க வேண்டும் எனவும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்., எம்.பி., ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் போலே பாபா ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த ஜூலை 2ல் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்ததும் வெளியேறியபோது, போலே பாபாவின் காலை தொட்டு வணங்க கூட்டத்தினர் முண்டியடித்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், பாதிக்கப்பட்டவர்களையும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் கூறியதாவது: இது ஒரு சோகமான சம்பவம். பலர் இறந்துள்ளனர். இந்த சம்பவத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் நிர்வாகத்தின் தரப்பில் குறைபாடுகள் உள்ளன, முக்கியமான விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே, அவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என உ.பி., முதல்வரை மனம் திறந்து கேட்டுக்கொள்கிறேன்.

இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், அது யாருக்கும் பயனளிக்காது. உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் நான் தனிப்பட்ட முறையில் பேசினேன். அவர்கள் என்னிடம் போலீஸ் ஏற்பாடு போதவில்லை என்று சொன்னார்கள். மேலும் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர், அவர்களின் நிலைமையை நான் புரிந்து கொள்ள விரும்பினேன். இவ்வாறு அவர் கூறினார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்