நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
5 ஆடி 2024 வெள்ளி 14:02 | பார்வைகள் : 1580
இளநிலை நீட் தேர்வில் பெரிய அளவில் ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், முழு தேர்வையும் ரத்துசெய்வது நியாயமானதாக இருக்காது. தேர்வை ரத்து செய்யக் கூடாது,' என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மே 5ம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த மாதம் 4ம் தேதி வெளியிடப்பட்டது. வினாத்தாள் கசிவு, 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட சர்ச்சைகளால் மறு தேர்வுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர். அதன்பேரில் மத்திய அரசுக்கும், தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமைக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இன்று (ஜூலை 5) நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், தேர்வில் பெரிய அளவில் ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், முழு தேர்வையும் ரத்துசெய்வது நியாயமானதாக இருக்காது. தேர்வை முற்றிலுமாக ரத்துசெய்வது, இந்தாண்டு தேர்வெழுதிய லட்சக்கணக்கான நேர்மையான விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்படுவர். எனவே நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது.
சதி, ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்தல், நம்பிக்கை மீறல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக முழு விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களை கொண்டுவர உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு ஜூலை 8ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.