Paristamil Navigation Paristamil advert login

துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலை: இ.பி.எஸ்., மீண்டும் சாடல்

துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலை: இ.பி.எஸ்., மீண்டும் சாடல்

7 ஆடி 2024 ஞாயிறு 13:05 | பார்வைகள் : 1260


துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலை தான். அவர் பச்சோந்தி போல் அவ்வப்போது நிறம் மாறுபவர் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.


மதுரை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு படு பாதாளத்திற்கு சென்றுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தாலே ஜனநாயக படுகொலை தான் நடைபெறும். விக்கிரவாண்டியில் வாக்காளர்களுக்கு மூன்று நேர உணவும், பணமும் கொடுக்கிறார்கள். திமுக ஆட்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆடுகளை வெட்டுவது போல் கொலை
தி.மு.க., பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கசாப்பு கடைக்காரர்கள் ஆடுகளை வெட்டுவது போல, மனிதர்களை ரவுடிகள் வெட்டுகிறார்கள். தி.மு.க., முதல்வரின் சொந்த தொகுதியிலேயே பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

விசுவாசம் இல்லாத பன்னீர் செல்வம்
பன்னீர்செல்வம் எப்போதும் அதிமுகவிற்கு விசுவாசமாக இருந்தது கிடையாது. அவர் ஒரு சுயநலவாதி. அவர் ராமநாதபுரம் தொகுதியில் இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டார். லோக்சபா தேர்தலில் பன்னீர் செல்வம் பெற்ற ஓட்டுகளுக்கு பணம் தான் காரணம். இரட்டை இலை சின்னத்தை முடக்க பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்.

துரோகி
இவர் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பார். தொண்டர்களை எப்படி அரவணைப்பார். பன்னீர் செல்வத்தை அ.தி.மு.க.,வில் இணைக்க ஒரு சதவீதம் கூட இடமில்லை. இது பொதுக்குழு உறுப்பினரால் எடுக்கப்பட்ட முடிவு. துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலை தான். கட்சி தலைவர் பதவிக்கு பொருத்தமில்லாதவர் அண்ணாமலை. பச்சோந்தி போல் அவ்வப்போது நிறம் மாறுபவர் அண்ணாமலை. அண்ணாமலை போன்று நான் நியமன தலைவர் அல்ல.

50 ஆண்டுக்கால உழைப்பு

கட்சி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். 50 ஆண்டுக்காலம் கட்சிக்காக உழைத்த பிறகு தான் இந்த பதவிக்கு வந்துள்ளோம். முதலில் கட்சி தலைவர் போல் பேச அண்ணாமலை கற்றுக்கொள்ள வேண்டும். அவர் கண்ணாடியில் பார்த்து அவரது நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து நேர்மையாக விசாரிக்க சி.பி.ஐ., விசாரணை தேவைப்படுகிறது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்