விக்கிரவாண்டி தொகுதியில் வாக்காளர்களுக்கு... பணமழை!
8 ஆடி 2024 திங்கள் 03:23 | பார்வைகள் : 1504
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் தீவிரமாக நடைபெற்று வரும் இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிகிறது. அதனால், தலைவர்கள் கடைசி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், ஆளுங்கட்சியினரும், எதிர் தரப்பினரும், ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வீதம் போட்டி போட்டு பணம் வழங்குவதால், வாக்காளர்கள் பணமழையில் நனைந்து, உற்சாகத்தில் திளைக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில், நாளை மறுதினம் இடைத்தேர்தல் நடக்கிறது. 276 ஓட்டுச்சாவடிகளில், 2.34 லட்சம் பேர் ஓட்டளிக்க உள்ளனர்.
'இண்டியா' கூட்டணியில் தி.மு.க., வேட்பாளர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா மற்றும் சுயேச்சைகள் உட்பட 29 பேர் களத்தில் உள்ளனர்.
15 அமைச்சர்கள்
இந்த தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்ததால், தி.மு.க, - பா.ம.க., - நாம் தமிழர் கட்சி என, மும்முனை போட்டி நிலவுகிறது. எனினும், தி.மு.க., - பா.ம.க., இடையே தான் கடும் மோதல் உள்ளது.
ஆளும் தி.மு.க., தரப்பில் அமைச்சர்கள் பொன்முடி, வேலு, நேரு, பன்னீர்செல்வம் உட்பட 15 அமைச்சர்கள், 30 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள், விக்கிரவாண்டி, காணை, கோலியனுார் ஒன்றியங்களில் முகாமிட்டு, ஆளுக்கு ஐந்து கிராமங்களை பிரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுஉள்ளனர்.
கட்சித் தலைமையிடம் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க, காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி, மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரையும் பிரசாரம் செய்கின்றனர்.
இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில், தி.மு.க., தரப்பில் முதலில் ஓட்டுக்கு 500 ரூபாய் வழங்கினர்.
அ.தி.மு.க., ஓட்டுகள் பா.ம.க.,வுக்கு போகும் என்ற அச்சத்தால், தற்போது கூடுதலாக 500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் போதாது என நிறைவாக, 1,500 ரூபாய் கொடுத்துள்ளனர்.
மேலும், தொகுதியில் உள்ள விளையாட்டுக் குழு இளைஞர்கள் 1,000 பேருக்கு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தலா 2,000 ரூபாய் என, தி.மு.க., தரப்பில் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
பா.ம.க., தரப்பில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிராமங்கள் தோறும் ஆளுங்கட்சியான தி.மு.க.,வின் முறைகேடுகளை விமர்சித்து, தினமும் அன்புமணி பிரசாரம் செய்து வருகிறார்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பா.ம.க., தரப்பும், தற்போது அ.தி.மு.க.,வின் ஓட்டுகளை பெற, அ.தி.மு.க., நிர்வாகிகள் வாயிலாக ஓட்டுக்கு பணம் வழங்கி வருகின்றனர்.
தி.மு.க., தரப்பில் 80 சதவீத வாக்காளர்களை கவனித்து விட்டனர். பா.ம.க., தரப்பில் 'வீக்'கான பகுதிகளை கண்டறிந்து, கூட்டணி கட்சியினர் வாயிலாக தொகை வழங்கி வருகின்றனர்.
ஏன் தடுக்கிறீர்கள்?
இறுதிக்கட்டமாக, கடைசி இரு நாட்களில் ஆளும் தரப்பு, ஓட்டுக்கு 2,000 ரூபாய் கொடுத்து இறுதி செய்யவும், வேட்டி, புடவை, கம்மல், மூக்குத்தி என ஆபரணங்களை வழங்கவும், சில அமைச்சர்கள் தரப்பில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த 'கவனிப்பு'களை தடுக்கும் போதும், பொதுமக்களை கூட்டமாக கூட்டி பணம் கொடுத்து அடைத்து வைத்து, எதிர்க்கட்சியினரின் பிரசாரத்துக்கு போக விடாமல் முடக்குவதாக புகார் எழுந்ததால், தி.மு.க.,வுடன் பா.ம.க., நாம் தமிழர் கட்சியினர் தகராறு செய்து வருகின்றனர்.
'சம்பாதிப்பதில் கொஞ்சம் கிள்ளி எடுத்து, தேர்தல் நேரத்தில் தான் அரசியல்வாதிகள் கொடுக்கின்றனர்; நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?' என, பல கிராமங்களில் பொதுமக்களே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பேசி, பணம், பரிசு பொருட்களையும் பெறுகின்றனர்.
ஓட்டுகள் பாதிக்கும் என கருதிய பா.ம.க., தரப்பும், ஆசாரங்குப்பத்தில் தி.மு.க.,வினர் வேட்டி, சட்டை கொடுத்ததை தடுத்ததுடன் நிறுத்திக் கொண்டது.
மேலும், 'பணம், பரிசு பொருள் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள்; ஆனால், ஓட்டுகளை பா.ம.க.,வுக்கு போடுங்கள்' என, வாக்காளர்களிடம் கேட்டு வருகிறது.
இதனால், விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள் பணமழையில் நனைவதுடன், உற்சாகத்திலும் திளைக்கின்றனர்.
டாஸ்மாக்கில் விற்பனை ரூ.3 கோடியாக உயர்வு
விக்கிரவாண்டி தொகுதியில், 10 நாட்களாக பெரும்பாலான கிராமப்புற மக்கள், வெளியில் வேலைக்கு செல்லாமல், தினமும் பிரசாரம், கவனிப்பு என 2,000 முதல் 3,000 ரூபாய் வரை கிடைப்பதை வாங்கி வருகின்றனர். தாராளமாக பணம் புழங்குவதால் ஆண்கள், டாஸ்மாக் மற்றும் ஹோட்டல்களில் குதுாகலமாக பொழுதை கழிக்கின்றனர். அதேசமயம், விவசாய வேலைக்கு ஆள் வரவில்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர். தேர்தல் பிரசாரம் மற்றும் 'கவனிப்பு' சூடு பிடித்துள்ளதால், விக்கிரவாண்டி தொகுதியில், மொத்தமுள்ள 39 டாஸ்மாக் கடைகளில், தினசரி விற்பனை 1.20 கோடியிலிருந்து, 3 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவரை மூன்று கட்ட கவனிப்புகள் நடந்துஉள்ளதால், வாக்காளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.