■ மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட RN.. புதிய பிரதமர் யார்..??!
8 ஆடி 2024 திங்கள் 05:23 | பார்வைகள் : 7400
நேற்று இடம்பெற்ற இரண்டாம் கட்ட தேர்தலின் முடிவில் RN கட்சி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோர்தன் பார்தெல்லா பிரதமராக வருவதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது.
தற்போதைய பிரதமர் கப்ரியல் அத்தால் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று ஜனாதிபதியிடம் வழங்க உள்ளார். அந்த பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதிபதி ஏற்றுக்கொள்வாரா என்பது இதுவரை தெரியவில்லை.
அதேவேளை, இந்த தேர்தலில் எந்த கட்சிகளும் அறுதிப்பெரும்பான்மை பெறாத நிலையில், தற்போது அதிக தொகுதிகளை கைப்பற்றிய Nouveau Front populaire கூட்டணி (182 ஆசனங்கள்) தங்களது கூட்டணி சார்பில் அரசாங்கம் அமைக்க அழைப்பு விடுத்துள்ளனர்.
முதலாம் சுற்றில் அதிக தொகுதிகளை கைப்பற்றி வெற்றியின் வாசல் வரை சென்ற RN கட்சி, இரண்டாம் சுற்றில் மொத்தமாக 143 தொகுதிகளுடன் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இளைஞர்களிடம் அமோக வரவேற்புள்ள ஜோர்தன் பார்தெல்லா பிரதமராக வருவதற்கு வாய்ப்புகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் RN கட்சியின் வரலாற்றில் அது பெற்ற அதிகூடிய வெற்றி இதுவாகும்.
அதேவேளை, எந்த கட்சியும் அறுதிப்பெரும்பான்மை பெறாத நிலையில், வரும் 2027 ஜனாதிபதி தேர்தல் வரை பாராளுமன்றத்தில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவுவதற்குரிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன எனவும். ஜனாதிபதியின் அரசாங்கம் 49.3 சட்டமூலத்தினை மீண்டும் கையில் எடுக்கும் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதியின் மறுமலர்ச்சி கட்சி 163 தொகுதிகளைக் கைப்பற்றி இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.