அமெரிக்காவின் தேர்தல் களத்தில் இருந்து விலகும் ஜோ பைடன்
8 ஆடி 2024 திங்கள் 07:02 | பார்வைகள் : 3122
கடந்த காலங்களாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடர்பில் பல சர்ச்சையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் களம் காணும் ஜோ பைடன் இன்னும் சில தினங்களில் போட்டியில் இருந்து விலகுவது தொடர்பில் முடிவெடுக்க இருக்கிறார்.
குறித்த தகவலை ஹவாய் ஆளுனரான ஜோஷ் கிரீன் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் தேர்தலில் களமிறங்குவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிக சமீபத்தில் தான் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஜனநாயகக் கட்சி ஆளுனர்களையும் ஜோஷ் கிரீன் சந்தித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக ஜனாதிபதி ஜோ பைடனுடன் நட்பு பாராட்டி வருபவர் ஜோஷ் கிரீன்.
தேர்தல் களத்திற்கு தாம் தகுதியானவர் அல்ல என்பதை ஜனாதிபதி ஜோ பைடன் உணர்ந்தால், போட்டியில் இருந்து அவர் விலக வேண்டும். தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று தனது நெருங்கிய வட்டத்தில் உண்மையான கருத்துகளைக் கேட்க வேண்டும் என்று ஜோ பைடன் உணர்கிறார் என்றும் ஜோஷ் கிரீன் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் இந்த விவகாரம் தொடர்பில் ஜோ பைடன் என்ன நினைக்கிறார் என்பது தொடர்பில் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதா என்ற பெரும் குழப்பத்தில் இருக்கும் ஜோ பைடன், கடும் போட்டி நிலவும் பென்சில்வேனியாவில் பரப்புரையை மேற்கொள்ள இருக்கும் நிலையிலேயே ஜோஷ் கிரீன் தொடர்புடைய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
டொனால்டு ட்ரம்புடனான முதல் நேரலை விவாதத்தில் ஜோ பைடன் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், போட்டியில் இருந்து விலக பலர் ஜோ பைடனை அறிவுறுத்தி வருகின்றனர்.
வயது மற்றும் உடல்நிலையே முதன்மை காரணமாக கூறப்படுகிறது. ஆனால் போட்டியில் இருந்து விலக கடவுளால் மட்டுமே தன்னை சமாதானப்படுத்த முடியும் என ஜோ பைடன் கூறி வருகிறார்.