இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு - 12 பேர் பலி
9 ஆடி 2024 செவ்வாய் 01:08 | பார்வைகள் : 1821
இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர்.
கோரண்டலோ மாகாணத்தில் உள்ள பொன் பொலாங்கோ மாவட்டத்தில் சிலர் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தை நடத்தி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை சுமார் 35 கிராம மக்கள் அந்த தங்கச் சுரங்கத்தில் வேலை செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கத்தில் பணிபுரிபவர்கள் மீது விழுந்தது.
இந்த சம்பவத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக கோரண்டாவில் உள்ள தேடல் மற்றும் மீட்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபிஃபுதீன் இலாஹுடே தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை 5 பேர் மீட்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். திங்கள்கிழமை சுரங்கத்தில் இருந்து மொத்தம் 11 சடலங்கள் மீட்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் சுமார் 19 பேர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.. அவர்களை தேடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் பிரதிநிதி அப்துல் முஹாரி கூறுகையில், இப்பகுதியில் சனிக்கிழமை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் ஒரு கரையும் உடைந்துள்ளதாகவும், பொன் பொலாங்கோவில் உள்ள ஐந்து கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளத்தால் சுமார் 300 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1000க்கும் மேற்பட்டோர் பத்திரமாக தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.