சென்னை - விளாடிவோஸ்டாக் புதிய வழித்தடம் அமைக்க திட்டம்
9 ஆடி 2024 செவ்வாய் 03:08 | பார்வைகள் : 1757
பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தில், சென்னை- - விளாடிவோஸ்டாக் கடல்வழி சரக்கு போக்குவரத்து வழித்தடத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான போர் சூழல், சரக்கு கப்பல்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள் ஆகியவை சர்வதேச வர்த்தகத்திற்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன.இதனால், 10,458 கி.மீ., தொலைவு கொண்ட சென்னை -- விளாடிவோஸ்டாக் வழித்தடத்தைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த வழித்தடம், ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இருக்கும் முக்கிய நகரமான விளாடிவோஸ்டாக் துறைமுகத்தையும், இந்தியாவின் தென்கிழக்கு துறைமுக மையமாக இருக்கும் சென்னையையும் இணைக்கும்.இத்திட்டம், இந்தியா -- ரஷ்யா இடையிலான இருதரப்பு பொருளாதார ஒப்பந்தத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த கடல் வழித்தடத் திட்டம், 2019 செப்டம்பரில் முன்மொழியப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, விளாடிவோஸ்டாக்கில் நடந்த கிழக்கு பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது, இந்தியா - ரஷ்யா இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, சென்னை துறைமுகத்திற்கும், விளாடிவோஸ்டாக் துறைமுகத்திற்கும் இடையே கடல் வழித்தடம் அமைக்கப்படும். இதன் வாயிலாக, நிலக்கரி, எண்ணெய், திரவ இயற்கை எரிவாயு, உரங்கள், கொள்கலன்கள் மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு வர்த்தகத்தில், ஏற்கனவே ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்டு வரும் பிற சரக்குகளையும் கையாள முடியும்.
கொரோனா காரணமாக, 2022 வரை, இத்திட்டத்தில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. தொடர்ந்து, ரஷ்யா - உக்ரைன் போரால், இது குறித்த பேச்சு முடங்கியது. பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தால், தற்போது இந்த வழித்தடத் திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்தால், சென்னை முக்கிய துறைமுகமாக மாறுவது மட்டுமின்றி, 10 நாடுகளில் இருந்து பொருட்களை குறைந்த கட்டணத்தில் இறக்குமதி செய்ய முடியும். இதனால், சென்னையில் சரக்கு போக்குவரத்து அதிகரிப்பதுடன், அதிகளவில் உற்பத்தி தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், ஏற்றுமதி ஆகியவை உயரும்.
ஏற்கனவே, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கிலிருந்து, நம் நாட்டின் மும்பை துறைமுகத்துக்கு கடல்வழி சரக்கு போக்குவரத்து வழித்தட திட்டம் பயன்பாட்டில் உள்ளது.16,066 கி.மீ., துாரம் உடையது. இந்த இரு நகரங்களை அடைய, 40 நாட்கள் பயணிக்க வேண்டியிருக்கும். ஆனால், விளாடிவோஸ்டாக் - சென்னை இடையிலான பயண காலம், 24 நாட்கள் மட்டுமே.