ஆர்எஸ் பாரதியை சிறைக்கு அனுப்புவோம்: அண்ணாமலை உறுதி
10 ஆடி 2024 புதன் 08:28 | பார்வைகள் : 1504
அவதூறு வழக்கில் தி.மு.க.,வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை விரைவில் சிறைக்கு அனுப்புவோம்'' , என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவதூறு
சில நாட்களுக்கு முன்னர் நிருபர்களை சந்தித்த தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‛‛ கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விஷயத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் சதி இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. விக்கிரவாண்டி தேர்தலுக்கும் இதற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. விக்கிரவாண்டி தேர்தலுக்கு முன்பாக இப்படி செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது'' என்றார்.
மறுப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணாமலை, மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த ஆர்எஸ் பாரதி, ‛‛ மன்னிப்பு கோர முடியாது. இழப்பீடு வழங்க முடியாது. வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி அதனை தயாராக எதிர்கொள்ள தயாராக உள்ளேன்'' எனக்கூறியிருந்தார்.
வழக்கு
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை நேரில் ஆஜராகி வழக்கு தொடர்ந்தார். இதன் பிறகு அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளச்சாராய விவகாரத்தில் என் மீது ஆர்.எஸ்.பாரதி அவதூறு பரப்பினார். அவரது கருத்து துக்கத்தை உண்டாக்கி உள்ளது. அரசியல் மாற்றம் வர வேண்டும் என போராடி கொண்டு உள்ளோம். 3 ஆண்டுகளில் இதுவரை யாரும் அவதூறு வழக்கு தொடர்ந்தது இல்லை. எத்தனையோ அவதூறு, விமர்சனங்கள் செய்யப்பட்டன. தற்போது எல்லை தாண்டி ஆர்எஸ்பாரதி பேசி உள்ளார்.
ஒரு கோடி ரூபாய்
மூத்த அரசியல்வாதியான ஆர்எஸ்பாரதி திமுக காலம் முழுமையாக முடிந்துவிட்டதை உணர்ந்து கொண்டதால், அவரது வாயில் இருந்து பொய் வர ஆரம்பித்து உள்ளது. இதனால் தான், ‛ நான் தான் காரணம். சதி செய்தேன்' எனக்கூறியுள்ளார். ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு உள்ளோம். இந்த தொகையை பெற்று கள்ளக்குறிச்சியில் மறுவாழ்வு மையம் அமைப்போம்.
மனுவில், அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளோம். நீதிமன்ற நடவடிக்கைகள் துவங்கி உள்ளது. இனிமேல் அவருக்கு சம்மன் செல்லும். தி.மு.க.,வை யாரும் எதிர்ப்பது கிடையாது. நமக்கேன் வம்பு என அனைவரும் ஒதுங்கி விடுகின்றனர். ஆர்எஸ் பாரதியை விரைவில் சிறைக்கு அனுப்புவோம்.
ராசியான கை
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆர்எஸ் பாரதி என்னை சின்னப்பையன் என்கிறார். இந்த சின்னப்பையன் என்ன செய்ய போகிறார் என பாருங்கள். ராசியான ஆர்எஸ் பாரதி கையை நான் பார்த்து விடுகிறேன். ஆர்எஸ் பாரதியை விட போவதில்லை. யாரும் எதிர்த்து பேசாததால், அவர் தொடர்ந்து அவதூறு பேசி வருகிறார். அவரது பேச்சு, கர்வம், ஆணவம், அட்டூழியத்தை தாண்டி போகிறது.
முட்டுக்கட்டை
மடியில் கனம் இருப்பதால் தமிழகத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள முட்டுக்கட்டை போடுகிறார் ஸ்டாலின். தி.மு.க., ஆட்சி அதிகாரம் மகன், மருமகனிடம் தான் உள்ளது. இருவரை சந்திக்காமல் எதுவும் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.