மூன்று நாட்கள் அமைதிக்குப் பின் கடிதம் எழுதிய ஜனாதிபதி மக்ரோன்..!!
10 ஆடி 2024 புதன் 15:42 | பார்வைகள் : 6191
இரண்டாம் சுற்று தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கடந்த மூன்று நாட்களாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் எவ்வித கருத்துக்களையும் வெளியிடாமல் அமைதி காத்தார். இந்நிலையில், ஜூலை 10, இன்று புதன்கிழமை பிரெஞ்சு மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தில், ஜூன் 30, ஜூலை 7 ஆகிய திகதிகளில் வாக்குகளைச் செலுத்தியிருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, முதல் சுற்றில் 11 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் தீவிர வலதுசாரிகள் வெற்றி பெற்றிருந்தனர். ஆனால் இரண்டாம் சுற்றில் அந்த சந்தர்ப்பத்தை நீங்கள் வழங்கவில்லை. யாரும் அறுதிப்பெரும்பான்மை பெறவில்லை. குடியரசுத் தலைவர் என்ற முறையில், நான் தேசத்தின் உயர் நலன்களைப் பாதுகாப்பவனாகவும், உங்களின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பவனாகவும் இருக்கிறேன் என குறிப்பிட்டார்.
மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை, நீங்கள் ஒரு புதிய பிரெஞ்சு அரசியல் கலாச்சாரத்தைக் கண்டுபிடிக்க அழைப்பு விடுத்தீர்கள். வலதுசாரி இடதுசாரி, ஜனாதிபதி பெரும்பான்மை கட்சிகள் இணைந்து ஆட்சி செய்யும் முறை ஒன்றை ஏற்படுத்தி உள்ளீர்கள். உங்களுக்காக, நான் இதை ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் பெயரில், நான் அதன் உத்தரவாதமாக இருப்பேன் எனவும் தெரிவித்தார்.