மத்திய நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு - 60 பேர் மாயம்
12 ஆடி 2024 வெள்ளி 07:55 | பார்வைகள் : 1872
மத்திய நேபாளத்தில் அமைந்துள்ள Madan-Ashrit பிரதான சாலை அருகே வெள்ளிக்கிழமை திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பயணிகள் பேருந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் வெளியிட்டுள்ள முதற்கட்ட தகவலில், பேருந்தானது திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கருதப்படுகிறது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக காணப்படுவதால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு இடையூறாக மாறியுள்ளது என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
நிலச்சரிவில் சிக்கிய இரண்டு பேருந்திலும், சாரதிகள் உட்பட 63 பயணிகள் இருந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகாலை 3:30 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவால் பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும்,
சம்பவம் நடந்த இடத்தில் அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் திரண்டுள்ளதாகவும், தேடுதல் பணி நடந்து வருகிறது என்றும் தகவல் வெளியிட்டுள்ளனர். இடைவிடாத மழை இடையூறாக உள்ளது என்பதால் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகளை தேடும் முயற்சியில் தடங்கல் ஏற்பட்டுவருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேருந்துகள் இரண்டும் காத்மாண்டுவில் இருந்து ரௌதஹத் கவுர் பகுதிக்கு பயணப்பட்டுள்ளது.
காத்மாண்டு நோக்கிச் சென்ற பேருந்தில் 24 பேரும், மற்றொரு பேருந்தில் 41 பேரும் பயணம் செய்துள்ளனர்.
பிரதமர் புஷ்ப கமல் தஹல் தெரிவிக்கையில், நடந்த சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு நாட்டின் பல பகுதிகளில் பலர் வீடு மற்றும் சொத்துக்களை இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உள்விவகார நிர்வாகம் உட்பட அரசாங்கத்தின் அனைத்து அமைப்புகளும் மீட்பு நடவடிக்கையில் களமிறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வானிலை மோசமாக இருப்பதால் காத்மாண்டுவில் இருந்து சிட்வான் பரத்பூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.