Paristamil Navigation Paristamil advert login

20 வயதுக்குட்பட்ட சம்பியன்ஷிப் -நேபாளத்திடம் தோல்வி அடைந்தது இலங்கை

20 வயதுக்குட்பட்ட சம்பியன்ஷிப் -நேபாளத்திடம் தோல்வி அடைந்தது இலங்கை

20 ஆவணி 2024 செவ்வாய் 09:34 | பார்வைகள் : 485


கத்மண்டு தசரத் ரங்கசாலா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை 18 ஆம் திகதி பிற்பகல் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் நேபாளம் வெற்றிகொண்டது.

போட்டியின் பெரும் பகுதியில் பந்தை தன்னகத்தே வைத்து பரிமாற்றத்தில் ஈடுபட்ட நேபாளம் போட்டியின் 23ஆவது நிமிடத்தில் போட்ட கோல் அதன் வெற்றி கோலாக அமைந்தது.

இலங்கையின் பெனல்டி எல்லைக்குள் இருந்து நேபாள முன்கள வீரர் நிராஜன் தாமி வலது காலால் ஓங்கி உதைத்த பந்தை கோல் காப்பாளர் அஹமத் ஷரீப் தடுக்க முயற்சித்த போதிலும் அது கைகூடாமல் போனது.

ஒரு சில சந்தர்ப்பங்களில் நேபாளத்தின் கோல் எல்லையின் பக்கவாட்டில் இலங்கை வீரர்கள் பந்தை நகர்த்திச் சென்ற போதிலும் முன்கள வீரர்களின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

மேலும், போட்டியின் இரண்டாவது பகுதியில் இலங்கை வீரர்கள் அடிக்கடி உபாதைக்குள்ளானது திருப்தி தருவதாக அமையவில்லை. 

இலங்கை வீரர்கள் அடிக்கடி தசைப்பிடிப்பால் துடிப்தை அவதானிக்க முடிந்தது.

எவ்வாறாயினும் இந்த இளம் வீரர்களுக்கு இதனைவிட சிறந்த பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டால் எதிர்காலத்தில் அவர்களில் பலர் தேசிய அணியில் இடம்பிடிப்பது உறுதி.

அதேவேளை, வட பகுதியைச் சேர்ந்த திறமைசாலிகளை களமிறக்க பயிற்றுநர்கள் ராஜமணி தேவசகாயம், ஒகஸ்டின் ஜோர்ஜ் ஆகியோர் தவறியது ஏன் என கேள்வி எழுப்ப வைத்துள்ளது.

இன்றைய போட்டியில் 20 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் அஹ்மத் ஷரீப், ஸவாஹிர் ஆய்மன் ரியாஸ், மொஹமத் பாதில், மொஹமத் அப்துல்லா, ஜோன் ஜிம்ரன் ஹரிஷ், மொஹமத் தில்ஹாம், ரணவீர தேனுக்க, மொஹமத் சாஹிர், முஹம்மத் முன்சிப் (தலைவர்), தேஷப்ரிய சதேவ், மொஹமத் உமர் ஆகியோர் முதல் பதினொருவராக இடம்பெற்றனர்.

பதில் வீரர்கள்: சமீம் அல்பாதிக், பாஹிம் பர்ஹாத், சிஹான் ஷஹில், அன்ரனி மலரவன், ரூபன் மதுமிதன், மலீக் ஹம்தி, விஜயகுமார் அபிஷன், ஸியாத் முபாஸல், கெய்டோப்லர் லியொன், சிவந்தன் ஆர்ணிகன், தேவதாஸ் நிலுஜன்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்