Paristamil Navigation Paristamil advert login

சீமான் -திருச்சி எஸ்.பி., மோதல் முற்றியது; இணைய கூலிப்படை என விமர்சனம்!

சீமான் -திருச்சி எஸ்.பி., மோதல் முற்றியது; இணைய கூலிப்படை என விமர்சனம்!

24 ஆவணி 2024 சனி 13:16 | பார்வைகள் : 1785


நாம் தமிழர் கட்சியினருடன் நீண்ட நாட்களாக மோதல் இருந்து வரும் நிலையில், தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் எதிராக அவதுாறு பரப்பும் கட்சியினருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக திருச்சி எஸ்.பி., வருண்குமார் அறிவித்துள்ளார்.

கருத்துகள்
சமூக வலைதளத்தின் தாக்கத்தை அவ்வளவு எளிதாக அளவிட முடியாது. சிறிய விஷயம் பெரியதாகிவிடும், பெரிய விஷயம் பஞ்சாக பறந்துவிடும். எப்படி நடக்குது இந்த மேஜிக் என்பது மட்டும் தெரியாது. அரசியல் கட்சிகள், அதன் முக்கிய பிரமுகர்கள் வெளியிடும் கருத்துக்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அதை பின்பற்றி அவரது ஆதரவாளர்கள் வெளியிடும் கருத்துகள் வெகு வேகமாக விமர்சிக்கப்படும்.

விலக முடிவு
இந்நிலையில் சமூக வலைதளத்தில் தம்மையும், தமது குடும்பத்தை பற்றியும் கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டதாக திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார்.

குறிப்பாக நாம் தமிழர் கட்சி மீதும், அதன் நிர்வாகிகள் மீது அவர் புகாரும் கூறி இருந்தார். அதேபோல, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும், வருண் குமார் மீது குற்றச்சாட்டுகளை கூறி இருந்தனர்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் இருந்து தானும் தமது மனைவி வந்திதா ஐ.பி.எஸ்., இருவரும் தற்காலிகமாக விலக முடிவு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார் வருண் குமார்.

அறிக்கை
அவர் வெளியிட்டு உள்ள நீண்ட அறிக்கையின் சுருக்கம் வருமாறு: நான் காவல்துறை பணியின் மீதுள்ள விருப்பப்பட்டு சேர்ந்தேன். சாமானிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன், மக்களின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்பதில் முனைப்போடு செயலாற்றி வருகிறேன்.

சட்ட அடிப்படையில் பணி
ஒரு யுடியூபர் பதிவிட்ட சர்ச்சை அவதூறுகளால் கைது செய்யப்பட்டார். சட்ட அடிப்படையில் பணியாற்றியதற்காக அவர் சார்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்னை கடுமையாக சாடினார்.

மான நஷ்ட வழக்கு
அதன் தொடர்ச்சியாக, சமூக வலைதளத்தில் என்னைப் பற்றியும், குடும்பத்தை பற்றியும் ஆபாசம் மற்றும் அவதூறுகளை குறிப்பிட்ட அந்த அரசியல் கட்சியினர் பரப்பி வருகின்றனர். முகம் தெரியாத கோழைகளுக்கும் இணையக் கூலிப்படைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமோ, தேவையோ எங்களுக்கு இல்லை.

ஆனால், இப்படி அவதுாறு பரப்பும் போலி கணக்குகளையும் அதன் பின் ஒளிந்திருக்கும் விஷமிகளையும் நீதிமன்றத்தில் நிறுத்துவேன். அவதூறு கருத்துக்களை பரப்பிய கட்சி ஒருங்கிணைப்பாளர், 2 பொறுப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன்.இந்த கூட்டத்துக்கு சட்டத்தின் முன் தகுந்த பாடம் புகட்ட வேண்டி உள்ளது.இவ்வாறு எஸ்.பி., வருண் குமார் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கையில், நாம் தமிழர் கட்சியின் பெயரோ, சீமான் பெயரோ எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ஆனால், அவருக்கும், சீமான் கட்சியினருக்கும் தகராறு நீண்ட காலமாக இருப்பதை அனைவரும் அறிவர்.

தமது பதிவில், அவதூறு பரப்பியதாக எக்ஸ் வலைதள பக்கத்தின் பல்வேறு பயனர்கள் முகவரிகளையும் அவர் வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்