தென் ஆப்பிரிக்காவுடனான தொடரை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்
26 ஆவணி 2024 திங்கள் 03:51 | பார்வைகள் : 988
டிரினிடாட்டில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி டிரினிடாட் பிரையன் லாரா மைதானத்தில் நடந்தது.
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச முடிவு செய்தது. அதன்படி அதனசி, ஷாய் ஹோப் இருவரும் மேற்கிந்திய தீவுகளின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இவர்களின் கூட்டணி 41 ஓட்டங்கள் எடுத்தபோது, அதனசி 28 (21) ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பூரன் 19 ஓட்டங்களில் நடையைக் கைட்டினார்.
எனினும் ஹோப் சிக்ஸர்களை பறக்கவிட்டு 22 பந்துகளில் 41 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும்.
அணித்தலைவர் ரோவ்மன் பௌல் 22 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 35 ஓட்டங்களும், ரூதர்போர்டு 18 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்களும் விளாசினர்.
இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் குவித்தது. லிசாட் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளும், க்ரூகர் 2 விக்கெட்டுகளும், பார்ட்மேன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ரியான் ரிக்கெல்டன் 20 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். ஆனால் ருத்ர தாண்டவமாடிய ரீஸா ஹென்ரிக்ஸ் 18 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்கள் குவித்தார்.
அடுத்து வந்த மார்க்ரம் 19 (9) ஓட்டங்களும், ஸ்டப்ஸ் 28 (24) ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர். அதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா விக்கெட் வீழ்ச்சி கண்டது.
ஷெப்பர்ட், ஷாமர் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, தென் ஆப்பிரிக்கா 149 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியுற்றது. ஷாமர் ஜோசப் (Shamar joseph), ரோமரியோ ஷெப்பர்ட் தலா 3 விக்கெட்டுகளும், அகேல் ஹொசைன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது. ரோமரியோ ஷெப்பர்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான கடைசிப் போட்டி 28ஆம் திகதி நடைபெற உள்ளது.