சமூக நீதியை மிதிக்கும் தி.மு.க., அரசு: வானதி சீனிவாசன் கடும் சாடல்
28 ஆவணி 2024 புதன் 02:47 | பார்வைகள் : 1123
மத்திய அரசின் நேரடி நியமனத்தை எதிர்க்கும் தமிழக அரசு, தலைமை செயலகத்தில் பலரை நேரடி நியமனம் செய்துள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது இல்லையா என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய அரசில் நேரடி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக முதல்வர், 'நேரடி நியமனம் என்பது சமூக நீதியின் மீது தொடுக்கும் தாக்குதல். தகுதிமிக்க பட்டியலின -பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர் மட்டத்தில் தட்டிப் பறிக்கும் செயல்' என கூறினார்.
ஆனால், தமிழக முதல்வரின் இரட்டை வேடத்தை, தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், இணைச் செயலர் ஜீவன் ஆகியோர் அனுப்பிய கடிதத்தில், 'தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அரசு துறைகளில் ஆலோசகர் நியமனம் தொடர்கிறது.
ஆரம்பத்தில் சில துறைகளில் மட்டுமே இருந்த ஆலோசகர் நியமனம், தற்போது அனைத்துத் துறைகளிலும் பெருகிவிட்டது. எந்த வரைமுறையும் இன்றி நியமனங்கள் செய்யப்படுவதுடன், ஊதிய நிர்ணயத்துக்கு எந்த வழிகாட்டுதலும் பின்பற்றப்படுவதில்லை.
'தமிழகத்தில், 69 சதவீதம் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் நிலையில், டி.என்.பி.எஸ்.சி., மூலம் அரசுப் பணிக்கு தேர்வாகி, பல நிலைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களின் முக்கியத்துவத்தையும் திறமையையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆலோசகர்கள் மூலம் அரசு நிர்வாகத்தை நடத்துவது ஏற்புடையதல்ல' என கூறியுள்ளனர்.